Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர் முடிவடைந்தாலும் தமிழரின் உரிமைப் போராட்டம் முடிவடையவில்லை என்ற நிலையில், தமிழர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தமது ஜனநாயக பலம்தான் என்று மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை சார்பாகவும், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை அடிகளார் விசேட அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளார். அதிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தமிழர்களின் உரிமைப்போராட்டம் என்பது அகிம்சைப் போராட்டமாக ஆரம்பித்து பின்னர் அது ஆயுதப்போராட்டமாக மாறி ஈற்றில் 2009 இல் அந்த ஆயதப் போராட்டமும் பல்வேறு சூழ் நிலைகளினால் முடிவுக்கு வந்தது. போர் முடிவடைந்தாலும் தமிழரின் உரிமைப்போராட்டம் முடிவடையவில்லை என்ற வகையில் தற்போது தமிழர்களாகிய நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நமது ஜனநாயக பலம்தான்.

நமக்கு இருக்கக்கூடிய ஜனநாயக உரிமைகளை உரிய விதத்தில் பயன்படுத்தி, நமது உரிமைகளை வென்றெடுக்கும் வழிவகைகள் பற்றி நாம் அதிக சிரத்தையோடு சிந்திக்கவும் செயலாற்றவும் அழைக்கப்படுகின்றோம். குறிப்பாக நமது கையில் இருக்கும் வாக்குச் சீட்டை சரியான வழியில் பயன்படுத்துவதன் மூலம் நமது உரிமைகளை நாம் உத்தரவாதப்படுத்த முடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை இன மக்களாகிய நாம் நமது வாக்குப் பலத்தை இந்தத் தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் நிரூபித்திருக்கின்றோம். இதோ இப்பொழுது மீண்டும் நமக்கொரு சந்தர்ப்பம் வந்துள்ளது. நமது வாக்களிக்கும் உரிமையை நிதானமாகச் சிந்தித்து செயற்படுத்துவதன் மூலம் நமது அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வாதார, அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்கமுடியும்.

குறிப்பாக இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மைக் கட்சிகள் சம பலத்தோடு போட்டியிடும் நிலையில், சிறுபான்மை மக்களாகிய நாம் நமது வாக்குகளைப் பயன்படுத்தி தமிழ்த்தேசிய நலன்களை முன்னிறுத்தக்கூடிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதன் மூலம், நாம் இலங்கை அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும்.

எனவே நமது அரிய பெரிய ஜனநாயக ஆயுதமாகிய நமது வாக்குரிமையை நாம் உரிய முறையில் பயன்படுத்தி, தவறாது வாக்களிப்பதன் மூலம் இத்தேர்தலை எதிர்கொள்ள உங்களைக் கேட்டுநிற்கின்றேன். மருத மடுத்திருத் தாயாரின் பரிந்துரை என்றும் உங்களோடு இருப்பதாக!” என்றுள்ளது!

0 Responses to போர் முடிந்தாலும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முடியவில்லை: அருட்திரு எ.விக்ரர் சோசை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com