Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் விழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த விண்ணிலிருந்து வந்த மர்ம பொருளான #WT1190F குறிக்கப்பட்ட நேரத்தில் கடலில் விழுந்ததை நிலத்திலிருந்து யாருமே அவதானிக்கவில்லை என்று நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கான ஆதர்சி கிளார்க் நிலையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி சம்பத் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விண்பொருள் குறிக்கப்பட்ட நேரத்தில் வளி மண்டலத்திற்குள் பிரவேசித்து இருக்கலாம். அது, 80 - 100 கிலோ மீற்றர்களுக்குள் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண் பொருள் ஒன்று நேற்று முற்பகல் தென்னிலங்கை கடலில் விழுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு மீற்றர்கள் நீளமான இப்பொருள் வளிமண்டலத்திற்குள் பிரவேசிப்பது மற்றும் கடலில் விழுவது குறித்து நிலத்திலிருந்தும் ஆகாயத்திலிருந்தும் நேற்று அவதானிக்கப்பட்டன.

அந்தடிப்படையில் நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்களுக்கான ஆதர் சி. கிளார்க் நிலையத்தின் நான்கு விஞ்ஞானிகள் தங்காலையிலிருந்து இதனை அவதானித்தனர். இதனடிப்படையிலேயே ஆராய்ச்சி விஞ்ஞானி சம்பத் மாரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை கோள் மண்டல நிபுணர்களும் அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர்களும் தங்காலையிலிருந்து இப்பொருள் விழுவது தொடர்பாக அவதானிப்புக்களை மேற்கொண்டனர்.

இதேநேரம் பிரான்ஸ் நாட்டின் இரு வான சாஸ்திர விஞ்ஞானிகள் அடங்கலான குழுவினர் காலியிலிருந்து இம் மர்மபொருள் விழுவது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாசா மற்றும் ஐரோப்பிய வான சாஸ்திர நிலையத்தின் விஞ்ஞானிகள் அடங்கலான சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று விஷேட விமானம் மூலம் இம்மர்ம பொருள் வளிமண்டலத்தினுள் பிரவேசிப்பது மற்றும் கடலில் விழுவது குறித்து ஆகாயத்திலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டது.

இம் மர்மப் பொருள் குறிக்கப்பட்ட நேரத்தில் வளிமண்டலத்தினுள் பிரவேசித்ததை ஆகாயத்திலிருந்து சர்வதேச விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர் என்றும் இலங்கை கோள் மண்டலம் தெரிவித்தது. இவ்விஞ்ஞானிகள் அபூதாபியிலிருந்து விசேட விமானமொன்றின் மூலம் ஆகாயத்திற்குச் சென்று இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இவ்விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிச் சென்றதை விமான நிலைய உயரதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

0 Responses to இலங்கைக் கடலில் விழலாம் என எதிர்பார்க்கப்பட்ட விண்பொருள் விழும் முன்னரே கலைந்திருக்கலாம்: சம்பத் மாரசிங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com