Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யக் கோரி வடக்கு, கிழக்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூரண ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜா கூறியுள்ளதாவது, "தமிழ் அரசியல் கைதிகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மீளவும் ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சிறைச்சாலைகளில் கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வடக்கு, கிழக்கு முழுவதும் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் ஹர்த்தாலுக்கு தமிழ்க் கட்சிகள், கல்விச் சமூகம், பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் உட்பட சகல தரப்புகளும் ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது. ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக, எமது சகோதரர்களான முஸ்லிம்களும் இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இது அரசியல் கைதிகளின் விடுதலைக் குரலுக்கும் இன ஐக்கியத்திற்கும் சிறந்த எடுக்காட்டு. ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதனால், அவர்களின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கான எமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சு நடத்தி எதிர்வரும் அமர்வுகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு அரசை வலியுறுத்தி பிரேரணையொன்றைக் கொண்டுவரவும் தீர்மானித்துள்ளோம். இந்தப் பயங்கரவாதச் சட்டத்தால்தான் எமது தமிழ் உறவுகள் 217 பேர் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்தச் சட்டத்தை நீக்க சிங்களக் கட்சிகளும் ஆதரவை வழங்கும் என்று நம்புகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை; கூட்டமைப்பு நாளை ஆராய்கிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com