Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவின் இறுதி மோதல்கள் தொடர்பிலான கருத்துக்கள், வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றவர்களை படுகொலை செய்த விவகாரத்தில் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் சாத்தியங்களை உருவாக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வெள்ளைக் கொடி விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார். அதில், இறுதி மோதல்களில் இடம்பெற்ற முக்கியமான விடயங்கள் தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

இந்த நிலையில், இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் சர்வதேச நாடுகள் உள்ளிட்ட தரப்புக்களோடு விடுதலைப் புலிகளை சரணடைய வைப்பது தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு சந்திரகாந்தன் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் அமைச்சராக இருக்கின்ற சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றன. அமைச்சர் சரத் பொன்சேகாவின் இந்தப் பேச்சானது ஏதோவொரு தொலைநோக்குப் பார்வையுடனான சந்தர்ப்பத்தை முன்வைத்தே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக இருந்த முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பகுதிகளில் போரின் கடைசி நிமிடங்களில் நடைபெற்ற விடயங்கள் பற்றி சரத் பொன்சேகா வெறுமனே ஒரு சில வார்த்தைகளைப் பேசிவிட்டுச் சென்றுவிட முடியாது. பாராளுமன்றத்திலோ வெளியிலோ இவ்விடயம் தொடர்பான பேச்சுகள் மௌமாக இருந்த வேளையில் சரத் பொன்சேகா அவர்கள் இந்த விடயத்தை தற்போது பேச்சுக்கு எடுத்திருப்பது வித்தியாசமானதொரு பார்வையைக் கொண்டு வந்திருக்கின்றது.

என்னுடன் பேசப்பட்டு நடத்தப்பட்ட - நான் நேரடியாகத் தொடர்புபட்ட இந்த வெள்ளைக் கொடி விவகாரத்துக்கு நீதி கிடைக்கப் போகின்ற சந்தர்ப்பமாகக்கூட இதனைப் பார்க்க முடியும். இந்தத் தருணம் விசாரணை என்ற விடயத்தில் கண்ணும் கருத்துமாக செயற்பட வேண்டியது மிக முக்கியமாகும். இதற்குரிய காலம் வந்திருப்பதாக உணர்கின்றேன். இதன் ஊடாக பல மர்ம முடிச்சுகள் வெளிவரலாம்.

உள்ளக விசாரணையோ, சர்வதேச விசாரணையோ நடத்தப்படவேண்டும். இன்னும் காலம் தாழ்த்தப்படக்கூடாது. வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் அரசியல் தலைமைகளோ, சர்வதேசமோ எந்தவொரு விடயத்தையும் செய்ததாக இல்லை. அத்துடன் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பாகும்.

வெறுமனே பூச்சாண்டி காட்டுவதும் காலத்தைக் கடத்துவதும் அனைத்து சமூகத்திற்கும் செய்கின்ற துரோகமாக இருக்கும். சர்வதேச நீதி விசாரணை வரும் வரையில் புலம்பெயர் சமூகங்களின் ஒத்துழைப்புகளுடன் வெள்ளைக்கொடி விவகாரத்தின் நீதிக்காகக் குரல் கொடுப்பேன்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்த காணாமல்போன கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள், எனது தந்தை மாமனிதர் சந்திரநேருவின் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) படுகொலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக தனிமனிதனாக நின்று போராடுவேன்.” என்றுள்ளார்.

0 Responses to பொன்சேகாவின் சாட்சியத்தினூடு ‘வெள்ளைக்கொடி’ விவகாரத்தில் நீதி கிடைக்கலாம்: சந்திரநேரு சந்திரகாந்தன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com