Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசு பள்ளிகளில் தலித் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்தம் செய்வதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கணடனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி மாணிக்கவல்லி என்பவர் அங்குள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்து வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவர் கழிவறைக்குச் செல்லும்போது, தண்ணீர் வாளியை உடன் தூக்கிச்சென்று சுத்தம் செய்ய வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

அத்துடன் நான்குவழி புறச்சாலைகளை கடந்து மாணவர்களை தேநீர் வாங்கி வரவும் கட்டாயப்படுத்தியுள்ளார். அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில் இத்தகையக் கொடுமைகள் இன்னும் நடைபெற்று வருவது வேதனையளிக்கிறது. குறிப்பாக, தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை மட்டும் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளிலும், இதர வேலைகளிலும் ஈடுபடுத்தி வருகின்றனர். இத்தகைய கொடுமைகளை தமிழக அரசு ஒழித்துக்கட்டமால் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது. தமிழ அரசின்  இத்தகைய மெத்தனப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கின்றோம். 

கீழையூர் பள்ளியில் நடந்த கொடுமைகளுக்கு புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. அவற்றை எமது கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறையின் மாவட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றும் இதுவரை அரசு தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசுத் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் எமது கட்சியின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி அறிவுரை மட்டுமே வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அத்துடன் கல்வித்துறையும், அந்த தலைமையாசிரியரை காப்பாற்றும் நோக்கத்துடனேயே செயல்பட்டுவருவதாகத் தெரிய வருகிறது. 

ஆகவே, உடனடியாக அந்த தலைமையாசிரியரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Responses to தலித் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்தம்: விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com