Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்மங்கள் உள்ளது என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத இந்த வெற்றிடத்தை “சூன்யமாகப் பார்க்கிறேன். அவரின் வெற்றிடத்தை நிரப்ப முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்மங்கள் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, அம்மாவை யார் பார்த்தார்கள் என்ற விவரங்கள்கூட தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னால் உடல் பரிசோதனைக்கு என அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல் என அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, படிப்படியாக நோய் வந்தது என்று அடுக்கிக்கொண்டே போனார்கள். அதன் பிறகு தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் சரியாக தெரிந்து கொள்கிறார், வழக்கமான உணவை எடுத்துக்கொள்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், திடீரென அம்மா இந்த நிலைக்கு ஏன் ஆளானார் என்பது குறித்து சாதாரண பொதுமக்களுக்கு எழுகின்ற கேள்விகள் எனக்குள்ளும் எழுகின்றன. சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று சசிகலா புஷ்பா வழக்கு போட்டிருப்பதன் மூலம், உண்மைகள் ஊர்வலம் வருமானால் எனக்கு மகிழ்ச்சிதான். அதிமுகவை சரியாக வழிநடத்திச் சென்றால் எக்காலத்திலும் அந்தக் கட்சிக்கு ஊனம் ஏற்படாது. அது வழி நடத்தக் கூடியவர்களின் வல்லமையைப் பொறுத்தது.

தீபாவுக்கும் முதல்வராக இருந்த அம்மாவுக்கும் இருந்த உறவு முறை ரத்த சம்பந்தம் உடையது. அதிமுக என்ற இயக்கத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லாமல் இருப்பது எனக்கே கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சிலர் வெளிப்படையாக இறங்கிவிட்டார்கள். என்னைப் போன்று பொறுப்பில் இருப்பவர்கள் அப்படி செய்ய முடியாது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த அன்றே, சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஒரு அமைச்சர் கருத்து சொல்கிறார். மாநில நிர்வாகத்துக்கு தலைமை ஏற்கக்கூடிய ஒருவரை சக அமைச்சரே இப்படி மட்டம் தட்டுவது இதுவரைக்கும் எங்கேயும் நிகழ்ந்தது இல்லை. அந்த அமைச்சரின் ஆசையை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதை அடைவதற்கான வழிமுறைகள் நியாயமாக இருக்கவேண்டும் என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

0 Responses to முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்மங்கள் உள்ளது: நாஞ்சில் சம்பத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com