Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் அரசியல்வாதிகளுக்குள் காணப்படும் பிரச்சினைகளினால் அபிவிருத்தி தடைப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளால் வடக்கு மாகாணத்திற்கு வரும் பணம் செலவிடப்படாமல் திரும்பிச்செல்கின்றது. குறிப்பாக இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய தொகைப்பணம் வந்தது அது ஒன்றும் செய்யப்படாமல் திருப்பியனுப்பப்பட்டது. அது மட்டுமல்ல மாங்குளம் பகுதியில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்கும் பணம் வந்தது அதுவும் ஒன்றும் செய்யப்படாமல் திரும்பிப் போனது.

விதண்டாவாதங்களில் ஈடுபடாது, அனைவரும் சேர்ந்து மக்களுக்கு வேலைசெய்ய வேண்டும். நான் இனவாத அரசியல் செய்யவில்லை. நாம் இன, மத, கட்சி வேறுபாடின்றி இணைந்தால் இந்த நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்லமுடியும்.

நமது கடவுள் எல்லாம் தமிழ் சிங்கள வேறுபாடின்றி ஒன்றாக ஒற்றுமையாக இருக்கின்றனர். அரசியல் பிரமுகர்களும் தமிழ் சிங்கள வேறுபாடின்றி திருமணம் செய்து ஒன்றாக இருக்கின்ற நிலையில், நாம் மட்டும் சண்டைபிடிப்பதற்கான தேவை எதற்கு? நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்ப்பட வேண்டும்.

இராணுவத்தினர் கூட புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள் இப்பொழுதுள்ள இராணுவம் யுத்ததுக்கானதல்ல; பொலிசாரும் அவ்வாறே. அனைவரும் மக்களுக்கானவர்கள் அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அதுவே நல்லிணக்கம்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் அரசியல்வாதிகளுக்குள் காணப்படும் பிரச்சினைகளால் அபிவிருத்தி தடைப்படுகின்றது: ரெஜினோல்ட் குரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com