Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“மத்தியில் நேரடியாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளாத போதிலும், நிழலமைச்சாக செயற்படுவதுக்கான முயற்சிகளை தமிழரசுக் கட்சி மேற்கொள்வதாக தகவல்கள் கசிந்துள்ளன” என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இடைக்கால அறிக்கைக்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் இதனையே தெரிவித்திருந்தது. தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இடைக்கால அறிக்கையை ஏற்க மறுத்திருந்தன. இதனடிப்படையிலேயே மக்களின் தீர்ப்பும் அமைந்துள்ளது.

நடைபெற்ற தேர்தல் ஒட்டுமொத்த இலங்கையின் அரசியலையே புரட்டிப்போட்டுள்ளது. ஊழலை மையப்படுத்தி ஜனாதிபதி சுழற்றிய வாள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டையும் பதம் பார்த்துள்ளதுடன் புதிதாக உதயமான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்னும் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தந்துள்ளது.

மறுபுறத்தில் வடக்கு-கிழக்கு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் பரப்பில் பொதுவான கொள்கையின் கீழ் ஜனநாயக பன்மைத் தன்மையை ஏற்று பொதுவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உளப்பூர்வமானதும், சட்ட அங்கிகாரம் மிக்கதுமான ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்படவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. எமது மக்கள் தமிழரசுக் கட்சியின் ஏகபோக எதேச்சதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

தற்போது தென்னிலங்கையில் நிலவும் குழப்பகரமான சூழலில் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் நிகழவுள்ளது. இந்நிலையில் தமிழரசுக் கட்சி சில முக்கியமான பதவிகளைப் பெற்றுக்கொள்ளப்போவதாகவும் வதந்திகள் உலவுகின்றன. இதற்காக மீண்டும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கத்தை பிணையெடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில், நேரடியாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளாத போதிலும் நிழலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கான முயற்சிகளையும் தமிழரசுக் கட்சி மேற்கொள்வதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இந்நிலையில், அரசாங்கக் கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளைப் பொறுப்பேற்றால், அது அவர்களது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் தமது வெற்றி வாய்ப்பை பாதித்துவிடும் என்று அஞ்சியே தமிழரசுக் கட்சி இன்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புடனும், தமிழ் தேசிய பேரவையுடனும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகப் பகிரங்க அழைப்புகளை விடுக்கின்றது.

கிழக்கில் ஒரு தமிழர் முதலமைச்சராக வரவேண்டும் என்ற விருப்பம் தமிழரசுக் கட்சிக்கு உண்மையில் இருக்குமானால் வலுவான கொள்கையின் கீழ் பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து பயணிப்பதுக்கான தனது விருப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்க வேண்டும்.

அத்தகைய கூட்டமைப்பு சட்டவலுவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கென்று ஒரு பொதுச் சின்னத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கியத்துக்கான எமது கதவுகள் திறந்தே உள்ளன.

இவை ஒருபுறமிருக்க, எதிர்வரும் 27ஆம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையத்தின் 37ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது. தற்போது மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையைக் காரணம் காட்டி இந்தக் கூட்டத்திலும் அரசைப் பிணையெடுக்கும் முயற்சிகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சி மேற்கொள்ளப் போகிறதோ என்ற சந்தேகம் பரவலாக மக்கள் மத்தியில் எழுதுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித்தனமான மக்கள் விரோத செயற்பாடுகளும் கூட்டமைப்பின் பேரால் அந்தக் கட்சியில் உள்ள ஒருசிலரே முடிவுகளை மேற்கொள்வதுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவுக்கான காரணம் என்பதை தமிழரசுக் கட்சி உணர்ந்துகொள்ள வேண்டும். இடைக்கால அறிக்கையில் இணக்கம் தெரிவித்து ஏற்றுக்கொண்டுள்ள விடயங்களுக்கு மாறாக, உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும் என்று தெரிவித்து ஆணை கோரிய போதிலும் தமிழரசுக் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை உணர்ந்தே மக்கள் அதற்கு ஓர் எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர். இனியாவது தமிழரசுக் கட்சி தன்னைத் திருத்திக்கொண்டு மக்களின் நலன்சார்ந்து இதய சுத்தியுடன் செயற்பட முன்வரவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to நிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ.தே.க.வோடு இணக்கம்; சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com