Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதற்கு, கட்சிகள் பிடிவாதங்களைத் தளர்த்த வேண்டும்’ என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மைக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கின்றது. ஆனால் ஆட்சி அமைக்க முடியாத நிலை காணப்படுகின்றது. ஒரு கட்சி, ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், இன்னுமொரு பெரும்பான்மைக் கட்சி இணைந்தே செயற்பட வேண்டும். தற்போதைய உள்ளுராட்சித் தேர்தல் முறைமையானது பிழையானது. யாழ்.மாநகர சபையைப் பொறுத்தவரையில் 27 வட்டாரங்களில், 14 பெரும்பான்மையான வட்டாரங்களை வென்றும் நாங்கள் இன்று ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.

இதுமட்டுமன்றி, வேறு சில சபைகளைப் பார்க்கின்ற போது வட்டாரங்களில் வெல்ல முடியாதவர்கள் விகிதாசார ரீதியில் ஒன்று அல்லது இரண்டு இடங்களைப் பெற்றுள்ளார்கள். இந்த முறைமையில் உள்ள பின்னடைவு, ஸ்திரத்தன்மையற்ற நிலையைத்தான் உருவாக்கியுள்ளது.

எவ்வாறு இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது தோல்வி நிலை அல்ல. தற்போதைய நிலையில் ஏதாவது ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவை உள்ளது. இதற்கு எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. கடும் நிபந்தனைகளை யாரும் விதிப்பது நல்லதல்ல. இணக்கப்பாட்டுடன் செல்வதே நல்லது. தமிழ்க் கட்சிகள், தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதனை பரிசீலனை செய்ய வேண்டும். பிடிவாதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

நாங்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து விலகவில்லை. சமஷ்டிக் கட்டமைப்பில் இருந்தும் விலகவில்லை. வடக்குக் கிழக்கு இணைப்பிலும் மாற்றமில்லை. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அடுத்த அரசியலமைப்பில் தமிழ், சிங்களம் இரண்டும் தேசிய மொழியாக்கப்படும், பிரயோக மொழியாக்கப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மாற்றங்கள் இடம்பெற்றுத் தான் இருக்கின்றன. ஆகையால் வட கிழக்கு இணைப்பும் அவ்வாறான மாற்றங்களில் வரும்.

ஆனபடியால் அதனை விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எமது கொள்கைகளில் உறுதியாகவே உள்ளோம். இதுதான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையாகும். இடையில் இதனை சிலர் வியாக்கியானம் செய்யலாம். அவ்வாறு செய்வது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகவே இருக்கும். கட்சியின் முடிவல்ல. தமிழரசுக் கட்சி கொள்கையில் உறுதியாகவே உள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப்புக்கள் உண்டு: சி.வி.கே.சிவஞானம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com