Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமையை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, கரு ஜயசூரியவை இடைக்காலத் தலைவராக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

கட்சியின் எதிர்கால தலைமைத்துவம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வதற்காக நடத்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்க வருமாறு சஜித் பிரேமதாசவுக்குப் பல முறை ரணில் விக்ரமசிங்க தரப்பினால் அழைப்பு விடுத்திருந்தபோதிலும், அவர் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

தேர்தல் தோல்வியோடு கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்த சஜித் பிரேமதாச, தலைவரைச் சந்திக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்திருக்கும் நிலையில் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்கினால் மாத்திரமே பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும் சஜித் பிரேமதாச திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இந்தப் பின்னணியில், கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்கி, அவரைப் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, செயற்குழுவினரின் ஆதரவையும் பெற்றுக்கொண்டிருக்கிறார் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது.

இதேவேளை, இடைக்கால தலைவராகத் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க இணக்கம் தெரிவித்திருக்கும் ரணில் விக்ரமசிங்க, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏனைய நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பின்படி, தற்போதைய தலைவர் பதவியை இராஜினாமா செய்தால் மட்டுமே புதிய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும். இல்லையேல், எதிர்வரும் 2024ஆம் ஆண்டுவரை ரணில் விக்ரமசிங்கவே தலைவராகத் தொடர்வார்.

இதேநேரம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடுவதாயிருந்தால், இம்முறை பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரிய களமிறங்குவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் முரண்பாடுகள் இல்லாத நிலையில், கட்சியின் ஜனாநாயக சம்பிரதாயங்களின்படி தலைமைப் பதிவியை ஏற்றுக்கொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.

கட்சியின் யாப்பு எவ்வாறிருப்பினும் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பதற்கு சஜித் பிரேமதாச கைக்கொண்டுவரும் நடைமுறைகள் பற்றிக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தப் பின்னணியிலேயே சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து அந்நியப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாகவிருந்தால் சஜித் அணியினர் தனிவழி செல்வது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

0 Responses to ஐ.தே.க.வின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரிய?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com