இலங்கை இனப் பிரச்சினையில் "தமிழர்களுக்கு எதனை வழங்க வேண்டும் எதனை வழங்கக்கூடாது" என்பது எனக்குத் தெரியும் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து வெளியாகும் இந்து நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிளிக்கும் போது, இனப் பிரச்சினைக்கு எதனை வழங்க வேண்டும். எதனை வழங்கக்கூடாது என்பது எனக்குத் தெரியும். இதற்கான அதிகாரத்தை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து கோருவோர் நாம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் தேவைகள் இங்கு கிடைக்காது. இலங்கையில் சமஷ்டி முறைக்கே இடமில்லை. அனைத்து சமூகமும் வாழக்கூடிய ஒரே தீர்வு தான் முன் வைக்கப்படும்.
13-வது அரசியல் தீர்வுத் திருத்தச் சட்டம் குறித்து என்னிடம் ஒரு யோசனை இருக்கின்றது. அதனை நான் நினைத்தால் நாளையும் நடைமுறைப்படுத்தலாம். ஆனால் அதனை மக்களிடம் இருந்தே எதிர்ப்பார்க்கின்றேன்.
சிறீலங்கா அதிபர் தேர்தலுக்குப் பின்னர் மக்களிடம் கிடைத்த ஆணையை வைத்தே இனப் பிரச்சினை குறித்து இறுதித் தீர்வு முன்வைக்கப்படும் என அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆறு வருட காலத்துக்கு அரச தலைவர் பதவியில் இருப்பதற்காக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார். இதன்படி 2011 ஆம் ஆண்டுதான் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இருந்தபோதிலும் சிறிலங்காவின் அரசியல் அமைப்பின்படி அரச தலைவர் ஒருவர் தனது முதலாவது பதவிக்காலத்தில் 4 வருடங்களைப் பூர்த்தி செய்த பின்னர் மற்றொரு பதவிக்காலத்துக்கான மக்களின் ஆணையைக் கோர முடியும். அதன்படிதான் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு மகிந்த திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.
0 Responses to இலங்கையில் சமஷ்டி முறைக்கான தீர்வுக்கே இடமில்லை: மகிந்த ராஜபக்ச