Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் இன்று தமிழர்கள் சந்தித்துள்ள துயர நிலைக்கு எனது கணவர் கருணா தான் பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த பின்னர் அவர் சுயநலவாதியாக மாறி விட்டார் என்று கருணாவின் மனைவி நிரோ எனப்படும் வித்யாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

கருணாவின் மனைவி வித்யாவதி, புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவில் இடம் பெற்றிருந்தார். அப்போது அவரது பெயர் நிரோ என்பதாகும். கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியபோது அவருடன் வித்யாவதியும் வெளியே வந்தார்.

வித்யாவதி தனது மூன்று குழந்தைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு அரசியல் புகலிடம் கோரியுள்ளார். தற்போது அகதி அந்தஸ்தில் அவர் ஸ்காட்லாந்தில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஈழ நிலை குறித்து ஸ்ரீலங்கா கார்டியன் என்ற இணையதளத்திற்கு வித்யாவதி பேட்டி அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் கருணா, தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டார், தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கிறார். இன்று தமிழர்கள் சந்தித்துள்ள நிலைக்கு அவரே காரணம் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

வித்யாவதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது..

தமிழின தலைவராக தனது கடமைகளை மறந்து செயல்படுகிறார் கருணா. தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்.

தனது அடிப்படைக் கடமைகளை அவர் சுத்தமாக மறந்து விட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தன்னைத் தமிழர்களின் தலைவராக அவர் கூறிக் கொள்கிறார். ஆனால் அந்தக் கடமையிலிருந்து அவர் தவறி விட்டார்.

குடும்பம் தொடர்பான சில விஷயங்களைக் கூட அவரிடம் நான் பேசத் தயங்குகிறேன். அந்த அளவுக்கு குழப்பி விடுகிறார்.

6 ஆயிரம் போராளிகளுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து உயரிய நோக்கத்திற்காக விலகி வந்தோம்.

ஆனால் தனது சுயநலத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, தலையாட்டி பொம்மை போல செயல்பட்டு வருகிறார்.

தமிழ் மக்கள் இன்று சந்தித்து வரும் இன்னல்களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.

அரசில் உள்ள சிலர் கருணாவை தவறான பாதையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊரே பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் நிலை போல உள்ளது கருணாவின் நிலை.

தன்னைத் திருத்திக் கொள்ள கருணாவுக்கு நான் ஒரு மாதம் அவகாசம் கொடுத்துள்ளேன். அவர் திருந்தாவிட்டால் திரைமறைவில் நடந்த பல ரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக அவரை எச்சரித்திருக்கிறேன். இன்னும் என்னென்ன ரகசிய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார் வித்யாவதி.

கருணாவின் மனைவி குறித்து அதிக தகவல்கள் எங்கும் வந்ததில்லை. இப்போதுதான் அவர் முதல் முறையாக மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈழத்தமிழர் துயரங்களுக்கு கருணாவே பொறுப்பு: மனைவி குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com