ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் இலங்கையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களுக்கு சர்வதேச சட்ட ரீதியாக இருக்கின்ற உரிமைகளையும், சுதந்திரத்தினையும் மதிக்க வேண்டும் என அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் சங்கமும், அவர்களின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான சமூக சேவைகள் கொள்கைக் குழுவும் இதற்கு கண்டனத்தை தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பணியாளர்களின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வன்முறையை கையாண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுப் பணியாளர்கள், குற்றமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் சிவில் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சட்ட முறைமைகள் மீறப்பட்டே தமது இரண்டு பணியாளர்களும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகாம்களில் தொண்டுப் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குபவர்கள் விசாரணைகள் செய்யப்படாமல் நினைத்த மாத்திரத்தில் கைது செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் கவனம் செலுத்த வேண்டும் எனவும், சிறீலங்கா அரசாங்கம் அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களையும் தண்டனைகள் இன்றி விடுவிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்து, அவர்களின் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதற்கிடையில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு உரிய அதிகாரிகளை கோருவதாகவும், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது
ஐ.நா பணியாளர்களின் உரிமைகள், சுதந்திரம், பாதுகாப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வன்முறையை கையாண்டுள்ளது: ஐ.நா
பதிந்தவர்:
தம்பியன்
17 July 2009
0 Responses to ஐ.நா பணியாளர்களின் உரிமைகள், சுதந்திரம், பாதுகாப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வன்முறையை கையாண்டுள்ளது: ஐ.நா