Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாய் ஆடு மேய்ச்சலுக்குப் போகும் நேரத்திற்காகவே காத்திருக்கிறது ஓநாய். பட்டிக்கு வெளியே மறைந்து நின்று குரலைமாற்றிப் பேசுகிறது. சற்றேறக்குறைய ஆட்டின் குரல். தாய் ஆட்டுக்கு நெருக்கமான அத்தனை ஆட்டையும் தனக்குத் தெரியும் என்கிறது. இலை தழைகளை எடுத்து வந்திருப்பதாகக் கூறி, பட்டியின் கதவைத் திறக்கச் சொல்கிறது.

குட்டி ஆடுகள் மிக மிக "ஸ்மார்ட்". கதவு சிறியதாக இருப்பதாகவும் முதலில் வாலை உள்ளே நீட்டி நுழையும்படியும் கேட்டுக்கொள்கின்றன. முட்டாள் ஓநாய் வாலை நீட்டியது. அந்த வால், அது யாரென்பதைக் காட்டிக்கொடுத்தது. கத்திரிக்கோலால் வாலை வெட்டின குட்டி ஆடுகள். ஊளையிட்டபடியே ஓடியது ஓநாய்.

ஆடு நீ... ஆடு நீ... ஓநாய் மாதிரி ஊளையிடாதே.... என்ற ஆட்டுக்குட்டிகளின் பாடலைக் கேட்க ஓநாய் அந்த ஏரியாவிலேயே இல்லை. அதன்பிறகு அதற்கு வாலும் இல்லை, வாலாட்டுவதுமில்லை. ஆளைப் பார்க்கவேண்டியது அவசியமில்லை, வாலைப் பார்த்தாலே போதும் என்பதை ஆடுகள் மட்டுமல்ல... அனைவருமே அறிந்துகொள்ளவேண்டும்.

உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக யாராவது அழுது புலம்பினால், உடனேயே கண்ணீர்க் கூட்டணி அமைத்துவிடக்கூடாது. அழுபவர் கிளிசரின் போட்டிருக்கிறாரா என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அதைவைத்து எது ஒரிஜினல், எது டூப்ளிகேட், எது வதந்தி, எது உண்மை என்பதையெல்லாம் விளங்கிக் கொள்ளமுடியும்.

கடந்த 60 ஆண்டுகளில் இப்போதுதான் என்றுமில்லாத அளவுக்கு பலவீனமாகி நிற்கிறோம்...

என்று மூக்கைச் சீந்துவது எதற்கு? நம்மை பலப்படுத்துவதற்கா, மனத்தளவில் பலவீனப்படுத்துவதற்கா? இவ்வளவு பாசத்தோடு நமக்கு பந்தி வைப்பவர்கள் பாயாசத்தை வைப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்!

ராம் அண்ணன் அடுக்கெடுக்கிறார் என்பது கதை....மீண்டும் பாய்வார்கள் என்பது வதந்தி..... சாதித்துக் காட்டுவார்கள் என்பது கற்பனை... என்றெல்லாம் இப்போது எழுதியிருக்கும் இதே பேனா தான், 30 ஆண்டுகளாக பிரபாகரன் கட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு முன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று முன்பு எழுதியது. அதன்மூலம் தனது கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தது. இத்தகைய பதிவால் தான், தாங்கள் யாரென்பதை அவர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.

மிகக் கடுமையாக விமர்சித்து ராஜபட்சேவை கோபப்படுத்துவதால் பயனில்லை, அதனால் அப்பாவித் தமிழர்கள்தான் தேவையில்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் எழுகிறது. உணர்ச்சிப் பெருக்கோடு எதையாவது செய்ய முனைவது சிங்கள வெறியர்களை உசுப்பேற்றி விடும், அது வன்னியில் ஆபத்தில் இருப்பவர்களை பேராபத்தில் தள்ளும் என்று வெளி உலகிலிருந்து ஒரு குரல் வருகிறது. இரண்டுமே சாதுர்யம் பேசுகின்றன.

மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அமெரிக்க அதிபராக இருந்தவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட். அவரது மனைவி, அன்னா எலீனர் ரூஸ்வெல்ட், மனித உரிமைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவர். நல்ல எழுத்தாளர். அச்சத்தை மட்டும் உங்கள் மனத்திலிருந்து அகற்றிவிட்டீர்களென்றால், எவ்வளவு மோசமான அனுபவத்திலிருந்தும் நீங்கள் பலத்தையும் மனோதிடத்தையும் நம்பிக்கையையும் பெறமுடியும் என்றார் எலீனர்.

எவருடைய மனைவி என்பதைவிட அவருடைய எழுத்துதான் எலீனரின் சுய அடையாளமாக இன்றுவரை இருக்கிறது. இது ஒருரகம். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன், இவருடன் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டே நம்மை அச்சுறுத்தும் விதத்தில் எழுதுவது இன்னொரு ரகம். இப்படியெல்லாம் ஜோடனை செய்பவர்களுக்கு, நம்மை பலவீனப்படுத்துவதைத் தவிர வேறு நோக்கம் இருக்க வாய்ப்பே இல்லை.

30 ஆண்டுகளாய் தாய் மண்ணில் நின்று போராடியவர்களுக்கு, அச்சம் தவிர் என்று ஆணையிட்ட பாரதியையும் தெரியும். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்ற வள்ளுவமும் தெரியும். எலீனர் சொன்னதும் தெரியும். எதை எங்கே எப்படி 'அப்ளை' செய்வது என்பதும் தெரியும். அவர்களுக்கு, பாதுகாப்பான இடங்களிலிருப்போரின் போதனை தேவையில்லை.

எலீனர் சொன்னதை விடுங்கள்... லசாந்த விக்கிரமதுங்க சொன்னதையாவது இவர்கள் புரிந்துகொண்டார்களா?. லசாந்த என்ற அந்த ஆண்மை தவறாத பத்திரிகையாளன் இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி சுட்டுக்கொல்லப்படுகிறான். தான் கொல்லப்படலாம் என்பதை அவன் அறிந்தே இருந்தான். கொல்லப்படுவேன் என்பதை அறிந்தே இருக்கிறேன், யார் கொலையாளி என்பதும் தெரியும், எப்போது என்பதுதான் தெரியவில்லை.... என்று கொல்லப்படுவதற்கு முன்தினம் எழுதியவன் அவன்.

லசாந்தவின் மரணவாக்குமூலமாகவே கருதப்படும் அந்தக் கடைசி தலையங்கம் ராஜபட்சேவை இப்படி எச்சரித்தது: தமிழர் பகுதிகள் முழுவதையும் நீ கைப்பற்றிவிடலாம். போராளிகளை நசுக்கிவிட்டதாக அறிவிக்கலாம். இந்த வெற்றியை நீ கொண்டாடலாம். ஆனால், தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்படுபவர்கள் மீண்டும் எழும்போது முன்னிலும் வலுவாக எழுவார்கள்.

லசாந்த, விவரமான பத்திரிகையாளன். அதனால்தான், பின்னர் என்ன நடக்கும் என்பதை ஜனவரியிலேயே எழுதினான். இதற்கு ஜோதிட அறிவு தேவையில்லை, குறைந்தபட்ச வரலாற்று அறிவு இருந்தாலே போதும். கடந்த காலத்தைத் திரும்பிப்பார்ப்பது வரலாற்றின் புதைகுழியிலிருந்து எலும்புகளை எடுத்து அழகு பார்ப்பதற்காக அல்ல, கடந்த காலங்களில் அடியோடு நசுக்கப்பட்ட இனங்களெல்லாம் எப்படி வீறுகொண்டெழுந்தன என்பதைப் புரிந்து கொள்வதற்காக.. லசாந்த அதைப் புரிந்துகொண்டிருந்தான். ஒப்பாரிப் பாடகர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியுமா?

2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபிறகு, அரசுகள்-ஆயுத இயக்கங்கள் என்று உலகம் இரண்டே தரப்பாகப் பிரிந்து விட்டதாகவும் நியாயமான வேட்கைகளுக்காகக் கூட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலை உருவானதாகவும் சொல்பவர்கள், நடந்ததைத்தான் சொல்கிறார்கள். தங்கள் தாய் மண்ணைச் சுவாசித்து மரணத்தை நேசித்த மாவீரர்களுக்கு புரியாத இந்த "உண்மை", இப்போது இதைச் சொல்லும் அறிவாளிகளுக்கு அப்போதே புரிந்திருக்கும் தானே.

அப்போது இருந்த அந்தச் சூழ்நிலையில்- தமிழர்களின் போராட்டம் விடுதலைப் போராட்டம் என்பதையும், அவர்கள் தங்கள் தாயகத்தை மீட்கத்தான் போராடுகிறார்கள் என்பதையும், விடுதலைப் போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதையும் சர்வதேசத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இந்த மகானுபாவர்கள் செய்ததென்ன?

அப்போது இவர்களிடம் பேனா இல்லையா, லாப்டாப் இல்லையா, இன்டர்நெட் இணைப்பு இல்லையா? நாட்டில் ரத்தம் சிந்திப் போராட இயலாத நிலையில், புலத்திலிருந்த தங்களது "ஸ்மார்ட் பவர்"-ஐ இதற்காக இவர்கள் பயன்படுத்தியிருக்க முடியுமே! பயன்படுத்தினார்களா, இல்லையா? இல்லையென்றால், இவர்களுக்கெல்லாம் ஸ்மார்ட் பவர் இருந்தென்ன, இல்லாமல் தொலைந்தென்ன!

எந்தத் தலைவனின் பெயரை உச்சரிக்கக் கூட தகுதி இல்லையோ அந்தத் தலைவனைப் பற்றி எழுதிக் குழப்பியவர்கள், பிரபாகரனை தமிழ்ச் செல்வன் ஏமாற்றிவிட்டதாக புழுதி கிளப்பியவர்கள், திடீரென ஞானோதயம் பெற்று, உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் அனைவருக்கும் நல்லது என்று உபதேசிக்கிறார்கள். புதிய உபதேசிகள்!

உருப்படியாக என்ன செய்யவேண்டுமாம்? இந்தியாவோடு அனுசரித்து, இந்தியாவை அரவணைத்து, இருதரப்பு நலன்களையும் அகத்திலெடுத்து, அதன் துணையோடு நமது போராட்டத் தேரை நகர்த்தவேண்டுமாம். பிறப்பால் மேட் இன் இண்டியா-வாக இருக்க நேர்ந்துவிட்டதுகுறித்த குற்ற உணர்வுடன் நாங்கள் கூனிக் குறுகி நிற்கிறோம். இது தெரிந்தும், அனுசரிக்க வேண்டும்... அரவணைக்க வேண்டும்... என்று எழுதினால் என்ன அர்த்தம்? அது என்ன மேட் இன் இண்டியா பேனாவா?

எந்த இந்தியாவை அரவணைக்கச் சொல்கிறார்கள்?

1983ல் தொடங்கிய இனப்படுகொலைகள் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கமிஷனில் இலங்கைக்கு எதிராக அர்ஜென்டைனா கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை வழிமொழியக் கூட மறுத்துவிட்ட இந்தியாவையா? தன்னுடைய பிரஜைகளான தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்பவர்களைத் திருப்பிச் சுடத் தெரியாத இந்தியாவையா? அப்பாவித் தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுத்துவிட்டு கொலைகார சிங்கள ராணுவத்துக்கு மருந்துகளை அனுப்பிவைத்த இந்தியாவையா? போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருப்பதாக நேசத்துடனிருந்த ஒரு மாநில முதலமைச்சரிடமே கூசாமல் பொய்யுரைத்த இந்தியாவையா?

காந்திய வழியில் உண்ணாநோன்பிருந்த எங்கள் திலீபன் கொஞ்சம்கொஞ்சமாக உயிர் நீத்ததை ஹுக்கா பிடித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவையா? ஒருபுறம் புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை வாங்கியபடியே, இன்னொருபுறம் புலிகளின் எதிரிகளுக்கு ஆயுதம் வழங்கிய இந்தியாவையா? அப்பாவித் தமிழ்மக்கள் மீது குண்டுவீச எந்த விமானத்தளத்திலிருந்து போர்விமானங்கள் புறப்பட்டனவோ அந்த விமானத்தளத்தைப் பழுதுபார்த்துக் கொடுத்த இந்தியாவையா? ஆயிரக் கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் எழுந்துநின்று குரல்கொடுத்தபிறகும் கள்ள மௌனம் சாதித்த இந்தியாவையா? பல்வேறு நாடுகள் ராஜபட்சேவைக் கண்டிக்க, அந்த பிணந்தின்னிக் கழுகுக்குப் பாராட்டுமடல் வாசிக்கும் இந்தியாவையா?

1942 ஆகஸ்ட் 8ம் தேதி நள்ளிரவில், மும்பை காங்கிரஸில் காந்தி ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அன்று அவரது பேச்சு, அவரது வழக்கமான பாணியில் அமைந்திருக்கவில்லை. கடுமையாக இருந்தது.

எங்களுக்கு உடனடியாக சுதந்திரம் வேண்டும்.. முடிந்தால், விடிவதற்குள்! செய் அல்லது செத்துமடி என்ற தாரகமந்திரத்தை இந்தியாவுக்குத் தருகிறேன். முடிந்தால் விடுதலை பெறுவோம்... அல்லது அதற்கான முயற்சியில் செத்துமடிவோம் என்று மும்பை நகரே அதிரும்விதத்தில் அந்த கிழட்டுச் சிங்கம் சீறியது.

அந்த காந்தியால் தான்... அண்ணல் காந்தியால்தான் இந்தியா பெருமை பெற்றதே தவிர, அன்னை சோனியாகாந்தியால் அல்ல! அன்றைக்கு காந்திக்கு சுதந்திரம் பிறப்புரிமை, இன்றைக்கு பிரபாகரனுக்கு சுதந்திரம் பிறப்புரிமை. அதனால்தான் அந்தக் கிழட்டுச் சிங்கம் சொன்னதை இந்த இளம்புலியும் சொன்னது- "செய் அல்லது செத்துமடி!"


இந்தியாவை அனுசரித்துப் போகும்படி நமக்கு போதிப்பவர்கள் காலச் சக்கரத்தில் ஒரு 60 ஆண்டு பின்னோக்கிய பயணம் செய்துகொண்டிருக்கிறார்களோ.... இது மகாத்மா காந்தியின் தேசம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்களோ.... ஐரோப்பாவிலிருந்து அழகு சாதனங்கள் மட்டுமின்றி காந்திகள் கூட இறக்குமதி ஆவதை அவர்கள் அறியவில்லையோ.. அவர்களுக்கே வெளிச்சம்.

இவர்களை மாதிரி ஆட்கள், தகுதியே இல்லாதவர்களிடம் போய் தட்டேந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான் 1987 செப்டம்பரிலேயே மிகவும் தெளிவான தமிழில் பிரகடனம் செய்தான், எங்கள் இனத்தை எழுப்பிநிறுத்திய வீரத்தியாகி திலீபன்.

இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்கவேண்டும். மற்றவர்களைக் கொண்டு அதை வெல்லலாம் என்று எதிர்பார்க்கவே கூடாது என்றான் அவன், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதத்தைத் தொடங்கும்போது. நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்த திலீபனின் வார்த்தைகளை தங்களுக்காக நாட்டைத் தியாகம் செய்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

திலீபன் பேசியது, செப்டம்பர் 14ம் தேதி.. அதற்கு 40 நாளுக்கு முன், ஆகஸ்ட் 4ம் தேதி சுதுமலையில் பேசினார் பிரபாகரன். அந்தப் பேச்சு ஒரு தேர்ச்சி பெற்ற அரசியல் தலைமையின் பேச்சுக்கு இணையானதாக இருந்தது. 1987 ஜூலை 29ல் ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இல்லை. அதை ஏற்கமறுக்கும் பிரபாகரனிடம், நீங்கள் இதை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காதீர்கள் என்கிறது இந்தியா. பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முன்வருகிறார் பிரபாகரன். மறுவாரம், சுதுமலை கூட்டத்தில் மக்களைச் சந்திக்கிறார். அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் பயன்படுத்திய வார்த்தைகள் வரலாற்றின் கவனத்தில் வைக்கப்படவேண்டியவை.


நாம் இந்த ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எம் மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம் என்றார் பிரபாகரன். இதைவிட நறுக்குத் தெறித்தாற்போல் வேறெவர் பேசமுடியும்? இதுதான் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல். இந்தியாவுக்கு மட்டும் எப்படி இது விளங்காதுபோயிற்று? அந்த மக்களை, ராஜீவின் ராணுவம் பாதுகாத்த லட்சணம் என்ன?

புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே, அவர்களை இங்கே வரவைத்து இவர்களுடன் மோதவிட்டேன் என்று வெளிப்படையாகவே சொன்னார் ஜெயவர்தன. ஸ்மார்ட் ஆக இல்லாததால் தான், ராஜீவ் தரப்புக்கு இது புரியாமல் போயிற்று. தொப்புளாவது கொடியாவது என்று தப்புதப்பாக இந்தியா முடிவெடுப்பது அப்போதிருந்துதான். இந்த இந்தியாவின் துணையுடனா ஸ்மார்ட் பவர் பேர்வழிகள் தேரை நகர்த்தப் போகிறார்கள்!

இவர்கள் தேரையும் நகர்த்தவேண்டாம், போரையும் நடத்தவேண்டாம். தாமதமில்லாமல் செய்யவேண்டிய வேலைகளில் ஈடுபட தாமாகவே முன்வரும் ஈடுஇணையற்ற சக்தியான இளைய தலைமுறையினரைக் குழப்பாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

வதை முகாம்களில் உள்ள மூன்று லட்சம் தமிழர்கள் என்ன செய்யப்படுவார்கள் என்பது கோதபாயவுக்கே தெரியாது. மகிந்த ராஜபட்சேவை என்ன செய்வதென்றே அவன் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்தநிலையில், 180 நாளில் மீள்குடியேற்றம் என்று ராஜபட்சே சொல்வதை, வடிகட்டிய அறிவாளியான இந்தியாவைத் தவிர வேறெவரும் நம்பப்போவதில்லை. 880 சதுர கிலோமீட்டர் கொண்ட யாழ்குடாவில், 160 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயங்களில் சிக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இத்தனை ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நடந்துவிடாத மீள்குடியேற்றம், 180 நாளில் வன்னியில் நடந்துவிடப் போகிறதா? அறிவுள்ளவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள். ராஜபட்சேவுக்கு கருணை மனு எழுதிக்கொண்டிருக்கமாட்டார்கள். நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியங்களாகத் திகழ்ந்தவர்கள் மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜா, சண்முகராஜா போன்றோர். அவர்களைப் போன்றவர்கள் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பில் இருந்தால்தான், உண்மைகள் வெளிவரும்.

அவர்கள் கோதபாயவின் பிடியில் இருந்தால், ஹிந்து பத்திரிகையின் மொழியில்தான் பேசவேண்டி இருக்கும். முல்லைத் தீவில் விமானத்திலிருந்து குண்டுவீசியது இலங்கை விமானப்படையினர் அல்ல, புலிகள்தான் விமானத்திலிருந்து குண்டுவீசினார்கள் என்றுகூட சொல்லவேண்டியிருக்கும்.

இது நம்முடைய கருத்து மட்டுமல்ல. சர்வதேச அமைப்பான அம்னஸ்டியும் இதைத்தான் சொல்கிறது. தங்களுடைய மக்களைக் கைவிட்டுவிடாமல் பங்கருக்கு உள்ளே இருந்துகூட மருத்துவம் பார்த்த அந்த மருத்துவர்கள் உள்ளேயும், ராஜபட்சே கும்பல் வெளியேயும் இருப்பது மனித இனத்துக்கே அவமானம். அந்த மருத்துவர்களை வெளியே கொண்டுவர உடனடி நடவடிக்கைகள் தேவை.

ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேரையும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோரையும் கொன்று குவித்து இனவெறியாட்டம் நடத்திய ராஜபட்சே சகோதரர்களையும் சிங்கள அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான சர்வதேச சூழல் உருவாகியிருக்கிறது. உலகெங்கிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தமிழ் மாணவர்களாலும் இளையோராலும் நிச்சயமாக முடியும். தங்களைக் காத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு அந்த அரக்கர்கள் தள்ளப்படும்போதுதான், இலங்கையின் திமிர் அடங்கும். தமிழரின் குரல்வளையின் மீதான பிடி விலகும். இதன் முதல்படியாகஇ நடந்த இனப்படுகொலை தொடர்பான ஆவணப்படங்கள் போன்றவற்றை உலகெங்கிலுமுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் திரையிடத் தேவையான முயற்சிகளை இளையோரும் மாணவர்களும் எடுக்கலாம். ராஜபட்சேயின் பொய்முகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதற்கான முதல்படி இது.

அடுத்த படி இதைவிட முக்கியமானது.

எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் என்கிற யதார்த்தம் ராஜபட்சேக்களுக்கும் பொருந்தும். உண்மையில் எதைப் பெற ராஜபட்சேக்கள் தகுதியானவர்களோ அதை அவர்கள் பெற ஆவன செய்ய ஆரம்பித்தாலே போதும், ஆட்டம் அடங்க ஆரம்பித்துவிடும்.

தன்னுடைய சொந்தமக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டுவீசும் நாடு என்னுடைய இலங்கை தான். இதைச் சொல்வதற்காகத் தான் என்மீது தேசத் துரோகி என்று முத்திரை குத்தப்படுகிறது. இதைச் சொல்வதுதான் தேசத்துரோகம் என்றால் அந்த முத்திரையைப் பெருமையுடன் ஏற்கிறேன் என்று வெளிப்படையாகப் பேசியதற்காகவே கொல்லப்பட்டான் லசாந்த. மகிந்தவின் நண்பனான லசாந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டதில் மகிந்தவுக்குத் தொடர்பிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினர். லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. ஆனால் இவ்வளவு ஆதாரங்கள் இருப்பது தெரிந்தும், தங்களைத் திசைதிருப்பப் பரப்பப்படும் வதந்திகளால் தடுமாறுகிறது தமிழ்ச் சமூகம்.

ஆம்புலன்ஸில் தப்பமுயற்சித்தபோது சுட்டோம், நந்திக் கடலில் உடல் கிடைத்தது, எரித்துவிட்டோம், கடலில் கரைத்துவிட்டோம், கோடாரியால் வெட்டினோம்........ என்பதெல்லாம் 100 வீதம் உடான்ஸ். எதற்கு இப்படிப் பொய்சொல்லவேண்டும்? இப்படியெல்லாம் புதிய புதிய வதந்திகளைக் கிளப்பி விட்டுக்கொண்டே இருந்தால் தான், அதி புத்திசாலிகளான நாம் அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். இருக்கிற ஆதாரங்களை ஆவணப்படுத்திஇ ராஜபட்சேவைக் கூண்டில் ஏற்றும் வேலையை அடியோடு மறந்துவிடுவோம். இதைத்தான் எதிர்பார்த்தது இலங்கை. அதைத்தான் செய்கிறோம் நாம்.

எனவே, ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றும் முயற்சியில் இளையோர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் முழுமூச்சோடு இறங்கவேண்டும். கொலைவெறி அடங்காத ராஜபட்சேக்களுக்குக் கிடுக்கிப்பிடி போட்டால்தான், அவர்களுக்கு சர்வதேச அரங்கில் தண்டனை நிச்சயம் என்கிற நிலையைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஏற்படுத்தினால்தான், கொதிப்பது அடங்கும். அவர்களை ஆத்திரப்படுத்துவதைவிட அம்பலப்படுத்துவதுதான் இப்போதைக்கு முக்கியம். இப்படியொரு நிலையை உருவாக்க முயலும்போது இதற்கு என்னென்ன விதத்திலெல்லாம் முட்டுக்கட்டைகள் போடப்படும் என்று முதலிலேயே ஆலோசிப்பதும் அதை எப்படிச் சமாளிப்பதென்று முன்கூட்டியே தீர்மானிப்பதும் அவசியம். சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கான சகல 'தகுதி'களும் ராஜபட்சேக்களுக்கு இருக்கிறது. அந்தக் கூண்டில் நிறுத்தப்பட்டால், தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. அதனால்தான், அந்தக் கூண்டில் நிறுத்தப்படுவதைத் தடுக்க தனக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளின் காலில் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார்கள் "இந்தியாவின் போரை நடத்தியவர்கள்".

குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தியபிறகு செய்யவேண்டிய வேலைகளை இப்போதே பட்டியலிட முடியும். ஆனால், இப்போதைக்கு நாம் தாமதமின்றிச் செய்யவேண்டியது, குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தத் தேவையான வேலைகளைத் தான்.குற்றவாளிக் கூண்டில் ராஜபட்சேக்களை ஏற்ற, சர்வதேச சமூகத்தை அணுகுவதற்குமுன், உலகெங்கும் சிதறிக்கிடக்கிற தமிழ்ச் சமூகத்தை அணுகுவது அவசியம். அந்தப் பணியையும் கூட தமிழ் மாணவர்களே முன்னெடுப்பது நல்லது. ஐரோப்பிய நாடுகளிலு, பிரிட்டன், கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த மாணவர்கள் உடனடியாகக் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட நாளில் உலகெங்கும் மனிதச் சங்கிலி அமைப்பதென்று தீர்மானிக்கலாம். (போராட்டத்தின் வடிவம் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். அது ஜனநாயக முறைப்படி கலந்துபேசி எடுக்கப்படவேண்டிய முடிவு.) போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சேக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகெங்கும் ஆதரவு திரட்டும் தூதுக்குழு ஒன்றையும் அவர்கள் அமைக்கவேண்டும். அந்தத் தூதுக்குழுவில், மாணவர்களும் மாணவிகளும் சம எண்ணிக்கையில் இடம்பெறவேண்டும். அந்தத் தூதுக்குழு தனது பணியைத் தமிழகத்திலிருந்தே தொடங்கலாம்.

தமிழகத்துக்கு வருகிற மாணவர்கள் தூதுக்குழு, முதலில் முதல்வர் கலைஞரையும்,அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அதைத் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசலாம். ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், இரவு-பகல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்காமல் ஒரே நாளில்-ஒரே சமயத்தில் உலகமெங்கும் மனிதச் சங்கிலி நடத்தத் தீர்மானித்திருப்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லலாம். அதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டுவதன்மூலம், அவர்களது ஆதரவை நிச்சயமாகப் பெறமுடியும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, அவரை ஏன் பார்க்கவேண்டும், இவரை ஏன் பார்க்கவேண்டும், அவர் வந்துவிடுவாரா, இவர் வந்துவிடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் அதிமேதாவிகளை அலட்சியப்படுத்தி அனைவரையும் சந்திப்பது மிக மிக முக்கியம். அந்த மனிதச் சங்கிலிக்கு தாய்த் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் உறுதி செய்தபிறகு, உலகெங்கும் பயணம் செய்து அந்தத் தூதுக்குழு ஆதரவு திரட்டலாம். செல்லும் இடமெல்லாம் அவர்களை வரவேற்க ஊரே கூடியிருக்கும். உலகெங்கிலும் மட்டுமல்ல, சென்னையிலும் அவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு கிடைக்கும். அன்றைய தினம் சென்னையில் அந்தத் தூதுக்குழுவை வரவேற்க, தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரளுவார்கள் என்று இப்போதே சொல்கிறேன்.... எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. பழைய ஆசாமிகள் காகிதப் புலிகளாகவும் காமெடி எலிகளாகவும் மாறிவிட்டபிறகு, உலக வீதிகளில் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்கிற பதாதைகளுடன் துணிவுடன் வலம் வந்தவர்கள் இந்த இளைய புலிகள் தான்.

ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற தமிழ் மாணவர்களின் கோரிக்கையுடன் இரவென்றும் பகலென்றும் பாராமல் உலகம் முழுக்க ஒரே சமயத்தில் கோடானுகோடித் தமிழர்கள் கை கோத்து நிற்பது உலகின் மனசாட்சியை உலுக்கும், ராஜபட்சேவின் அலரி மாளிகையைக் குலுக்கும், ராஜபட்சேக்களுக்கும் குற்றவாளிக் கூண்டுகளுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்கும். அதற்குப் பிறகு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களாலோ அக்பர் ரோடு அக்காக்களாலோ கூட மகிந்த ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாது.

இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதச் சங்கிலியை அமைக்க உலகெங்கிலும் இருக்கும் எங்கள் தமிழ் இளையோராலும் மாணவர்களாலும் நிச்சயமாக முடியும். ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கைகோத்து நிற்கவைப்பதற்கான தகுதியும் உறுதியும் இந்தப் பொடியன்களுக்கு இருக்கிறது. தங்களுக்காக தாயகக் களத்தில் உயிர்நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களை மனத்தில் சுமந்துகொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறைக்கு, இப்படியொரு வரலாற்றைப் படைக்கவேண்டிய கடமயும் இருக்கிறது. சர்வதேச அரங்கில்இ போர்க் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியன் அல்லது வெறியர்கள் நிறுத்தப்படும் போதுதான், இலங்கையின் ஆணவமும் அராஜகமும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையும் அடங்கும். அப்படியொரு நிலையில், எப்படியெல்லாம் தமிழினத்தை நசுக்கலாம் என்று யோசிக்கக்கூட நேரமின்றி, எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று யோசிப்பதற்கு மட்டுமே ராஜபட்சே கும்பலுக்கு நேரமிருக்கும். ஒட்டுமொத்த சிங்கள வெறியர்களின் நச்சுப்பல் பிடுங்கப்படும். அதன்மூலம் முகாமுக்குள்ளேயே முடிந்து போக இருக்கும் 3 லட்சம் தமிழர்களின் மூச்சுக்காற்று உயிர்த்தெழும். அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய நிலை ராஜபட்சேவுக்கு ஏற்படும். ஆக, எரிவதைப் பிடுங்கினால் தான் கொதிப்பது அடங்கும்.

ராஜபட்சேவை ஆத்திரப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அர்த்தமற்றது என்பதை, அப்படிச் சொல்பவர்களுக்கு முதலில் எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம்தான். அதே சமயம், நம்மீதான அக்கறையில்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கையையும் பற்றியபடிதான் மனிதச் சங்கிலி அமைக்க முடியும்.

இதையெல்லாம் எடுத்துரைக்க எழுத்தைப் பயன்படுத்தாமல், இறக்காதவர்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழ் எழுதி புழுதி கிளப்பிக் கொண்டிருப்பவர்கள் இனியாவது உருப்படியான வேலைகளில் இறங்குவார்களாக! எவருக்கும் துதி பாடுவது எனது நோக்கமல்ல என்று சொல்லிக்கொண்டே துதி பாடுவது சுமந்த வயிற்றுக்கும் அழகல்ல, சுமக்கும் மண்ணுக்கும் அழகல்ல.

மனிதாபிமான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை உலகுக்கே எடுத்துக் காட்டியுள்ளோம் என்று ராஜபட்சே குறுக்குசால் ஓட்ட முயல்வது, இலக்கை விட்டுவிட்டு உலக்கை போட்டுக்கொண்டிருக்கும் சிலரது அறியாமையால் தான். எனவே, துளியும் தாமதமின்றி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். நச்சு எலிகள் தப்பிக்கவே முடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிப்போம். அதற்காக, மனிதச் சங்கிலியோ,, அதைவிட மகத்தான பணியோ... எதுவாயிருந்தாலும் அவற்றில் அளவுகடந்த ஈடுபாடு காட்டுவோம். நமது எழுச்சி, எதிர் நிலையில் இருப்போரைக்கூட நம்முடன் இணைந்துகொள்ளச் செய்யும்.

பெரியகுளத்துக் கவிஞன் மு.மேத்தா சொன்னதைப் போல்,

நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்

உதிர்ந்த மலர்கள்கூட

ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்!


கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டுஇ உறுதியோடும் நம்பிக்கையோடும் ஓர் உண்மையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொருவரும் முன்வருவோம்.

வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை

நம் சொந்தங்களை ரத்தம் சிந்தவைத்த

நச்சுப் பாம்புகளை நையப்புடைப்போம்....

ரத்தம் குடித்த ராஜபட்சிகளை

சர்வதேச கூண்டில் ஏற்றுவோம்....



இறக்கை என்பது இயற்கையின் எல்லை,

இயலாதென்று முயலாதவர்கள்

இறக்கை இருந்தும் பறப்பது இல்லை.



முத்துக்குமாரின் நினைவோடு

ஒட்டுமொத்த உலகத்தையும்

திரும்பிப் பார்க்கவைத்த

எங்கள் இளையோரின் அகராதியில்

இயலாது என்ற வார்த்தையே இருக்க இயலாது.



அந்தப் பொடியன்களின் தலைமையில்

உலகத் தமிழினத்தைக் கைகோக்க வைப்போம்....

களங்கத்தைத் துடைப்போம்... வரலாறு படைப்போம்!

ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றுவதுதான், கம்பிவேலிகளுக்குப் பின்னால் கண்ணீருடன் நிற்கும் எங்கள் சொந்தங்களுக்கு விடுதலை வாங்கித் தரும். ராஜபட்சேக்கள் உள்ளே போகிறவரை, எங்கள் சொந்தங்கள் வெளியே வரமுடியாது என்பதை மனத்தில் நிறுத்தி,இன்றே இப்போதே களத்தில் இறங்குவோம்.


காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்

- புகழேந்தி தங்கராஜ்

0 Responses to எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com