யூலை மாதம் பிறப்பெடுத்துவிட்டது. யூலை என்பது கறுப்பாக மாறி கால் நூற்றாண்டு கடந்தோடி விட்டது. சிங்களம் தமிழர்கள் மீது சுமத்திய கறுப்பு யூலையின் கொடூரத்தை, அதே கறுப்பு யூலை ஒன்றில்தான் அடங்க வைத்தனர் தமிழர்கள்.
இன்றைப் போன்று அன்றைய நாளன்றில் பெரும் அதிர்ச்சியாக வந்திறங்கியது அந்தச் செய்தி. தமிழர்களின் வாழ்வு முடிகின்றது என்ற சிங்களத்தின் எகத்தாளத்திற்கு விழுந்த பெரும் சாவு மணியாக ஒலித்தது அந்த வெடியோசை. தமிழினத்தை அழிக்க சிங்களம் தொடக்கி வைத்த அதே கறுப்பு யூலையில், தனது இனத்திற்காக தன்னையே கொடுக்கும் தற்கொடை மனிதர்களின் பிறப்பும் நிகழ்ந்தது. யூலை 5 ஈழத்தமிழர்களின் வாழ்வில் நம்பிக்கைக்குரிய ஒருநாள்.
யானையை ஒரு சிறு அங்குசத்தால் அடக்கியதுபோன்று, தினவெடுத்து நின்ற சிங்களத்தின் இனவெறித்தனத்தை கறுப்பு யூலை காலத்தில்தான் ஒற்றை மனிதாக சென்று அடங்க வைத்தான் மில்லர். அதனால், கறுப்பு என்பது தமிழர்களின் குறியீடாக மாறியது.
அடங்கிக்கிடந்த தமிழினத்தின் எழுச்சியின் வடிவமாக, தாயக விடுதலைப் பயணத்தில் தடையாக இருந்த தடைக் கற்களை தகர்க்கும் பெரும் தடை நீக்கிகளாக அந்தக் கறுப்பின் வடிவங்கள் ஆற்றிய தியாகங்கள் வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாத அளப்பரியவை. முகம் காட்டத் துடிக்கும் மனிதர்களுக்கு நடுவே, தங்களுக்கென்று முகவரி தேடி அலையும் மனிதருக்கு நடுவே, “முகம் தெரியாமல், முகவரி கூறாமல், செயலாக மட்டுமே செய்துவிட்டுப்போன மாமனிதர்களின் மகத்துவமான காலமிது”.
பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லிற்குள் அடக்கிவைத்து, இவர்களின் தியாகங்களை இந்த உலகம் கொச்சைப்படுத்த முனைந்தாலும், விடுதலையை நேசிக்கின்ற மக்களின் புனிதர்களாக, பூசைக்குரிய கடவுளர்களாக இவர்கள் இன்னும் வாழ்கின்றார்கள். என்றும் வாழ்வார்கள்.
விடுதலை வரும் என்ற நம்பிக்கையோடுதான் இவர்கள் விடைகொடுத்துப் போனார்கள். தமது மக்களும் தங்கள் தாயகமும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் என்ற நம்பிக்கையோடுதான் அவர்கள் இறுதிவரை உறுதிதளராது தங்கள் பாதையில் நடந்தார்கள்.
இன்று தமிழ் மக்களின் கதை முடிந்தது. புலிகளின் கதை அழிந்தது என்று கதையளக்கும் சிங்களம் இன்னும் இருட்டினில் தேடிக்கொண்டிருக்கின்றது கறுப்புப் புலிகளை. ‘பலவீனமான இனத்தின் பலமான ஆயுதங்களாக நான் கரும்புலிகளை உருவாக்கினேன்’ என்று அதனால்தான் தலைவர் கூறினரோ என்று எண்ணும் அளவிற்கு, இன்றும் சிங்களத்தை சூழ்ந்திருக்கும் அச்சம் இந்தக் கரும்புலிகள்தான்.
அவர்கள் விடைகொடுத்து விடுதலைக்காகப் போகும்போது எப்போதும் ஒன்றைமட்டும் உறுதியாகச் சொல்லிவிட்டே சென்றார்கள். ‘தலைவரைக் காப்பாற்றுங்கள், தலைவரைக் காப்பாற்றுங்கள்’ என்பதுதான் அவர்களது தாரகமந்திரமாக இருந்தது. “ஆயுதங்கள் அல்ல, தலைவர் தான் தமிழ் மக்களின் பலம்”. அந்தத் தலைவரைக் காப்பாற்றுங்கள் என்று வழிக்கு வழி அவர்கள் சொல்லிவிட்டுத்தான் சென்றார்கள்.
ஆனால், இன்று எதிரிகளையும் துரோகிகளையும்விட தலைவரை அடிக்கடி சாகடித்துக் கொண்டிருக்கின்றார்கள் எம்மவர்கள். தலைவரின் மரணத்தை நம்பவைத்துவிட வேண்டும் என கங்கணம்கட்டிக்கொண்டு இவர்கள் செயற்படுகின்றபாடு இப்போது கேலிக்குரியதாக மாற்றம்கண்டு வருகின்றது.
‘மலையை நகர்த்த விரும்புகிறவன், முதலில் கற்களை நகர்த்த பழகிக் கொள்ள வேண்டும்’ என்பது ஒரு முதுமொழி.கற்களையே நகர்த்த முடியாதவர்கள் மலைகளை எப்படி நகர்த்துவார்கள் என்பதே தமிழ் மக்களுக்கு இன்று எழும் கேள்வி. கரும்புலிகள் மலைகளை தகர்த்தவர்கள். அவர்கள் கற்களை அல்ல, மலைகளையும் நகர்த்துவார்கள்.
ஆசிரியர் தலையங்கம்
ஈழமுரசு



0 Responses to ஒளிதந்த கறுப்புச் சூரியன்கள்