இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ தொடர்ந்து பாடுபடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாயர் வைகோ கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மதிமுக பொறுப்புக்குழு தலைவர் ஏ.கே.மணியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நான் 30, 40 ஆண்டுகளாக செஞ்சிக்கு வருகிறேன். கடந்த 16 ஆண்டுகளாக தர்ம யுத்தம் நடத்தி வருகிறேன். மனித நேயத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.
மனிதர்கள் காட்டு மிராண்டிகளாக திரிந்த காலத்திலேயே உடை அணியும் நாகரிகத்தை உலகத்துக்கு அறிமுகம் செய்தவன் தமிழன். ஒருவன் உடை உடுத்துவதும், உடுத்தாததும் சுதந்திரம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?. நாகரிகத்தையும், பண்பாட்டையும் வகுத்தவர்கள் அதை மீறக்கூடாது.
மானத்தோடு வாழ உடை அவசியம். தனது மடியில் விழுந்த புறாவுக்காக தனது தசையை அறுத்துக் கொடுத்து சிபி சக்கரவர்த்தி புறாவை காப்பாற்றினார். இந்த மண்ணில் நீதிபதியே மிரட்டப்படுகிறார்கள். அமைச்சரே நீதிபதியை மிரட்டுகிறார். நீதி குழி தோண்டி புதைக்கப்படுகிறது. நாம் எங்கே செல்கிறோம் தெரியவில்லை.
இலங்கை தமிழர்கள் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தவர்கள் விடுதலைப் போரில் அவர்களை போன்ற வீரத்தை நான் பார்த்ததில்லை. தோல்வி என்பது மனதை பொறுத்தது. வாழ்க்கையை நம்பிக்கையோடு முன்னெடுத்துச் செல்வோம்.
எத்தனை இலட்சம் தமிழர்களின் வாழ்வு நாசமாக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரும் அந்த கொடுமையை தடுத்து அந்த கொடுமையை செய்பவர்களுக்கு தண்டனை பெற்றுத் கொடுப்போம். தமிழர்கள் சுதந்திரமாக வாழ பாடுபடுவோம் என்றார்.



0 Responses to இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழ தொடர்ந்து பாடுபடுவோம்: வைகோ