லங்கேஷ் என்ற கன்னடப் பத்திரிக்கையின் சார்பில் "ஜெய் ஈழம்" என்றத் தலைப்பில் கருத்தரங்கமும், கன்னடப் பத்திரிகையாளர், குமார் ப்ரோடிகட்டி எழுதிய "ஓ ஈழம்" நூல் வெளியீட்டு விழாவும், கருநாடகத் தலைநகர், பெங்களூர், காந்தி பஜார்- கரூர் வைஸ்யா வங்கி பணியாளர் சங்க அரங்கில் 18/07/2009 அன்று மாலை நடைபெற்றது.
லங்கேஷ் பத்திரிக்கையின் அதிபர் கவுரி லங்கேஷ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் முனைவர், பஞ்சகரே ஜெயபிரகாஷ், "ஓ ஈழம்" நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது ஈழத்துப் புலி பிரபாகரனின் வீரம் எனக் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் போரில், பின்னடைவு போன்ற தோற்றமிருந்தாலும் தமிழீழம் என்பது வரலாற்றுத் தேவை. தமிழீழம், தமிழர்களுக்கான பிரச்னை மட்டும் அல்ல, உலகெங்கும் வாழும் முற்போக்கு சிந்தனையாளர்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குப் போராடுபவர்களும், தேசிய இன விடுதலை வேட்கையாளர்களும் தமிழீழத்திற்கு குரல் கொடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மனித உரிமை செயற்பாட்டாளர், சிவசுந்தர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். பெங்களூர், தமிழ் சங்கத்தலைவர் மீனாட்சி சுந்தரம், கருநாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி. இராசன், கருநாடக மாநில பெரியார் திராவிடர் கழக செயலாளர் இராவணன் மற்றும் திரளான இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று வசனம் பேசி, இன,மொழி உணர்வுகளை முதலீடாக்கி, தமிழக முதலமைச்சராக கொலு வீற்றிருக்கும் கருணாநிதியே, தனது குடும்பத்தினரின் பதவி வெறிக்காக, ஈழத்தமிழர் விடயத்தில் வாய் மூடி, டெல்லியின் அடிமை சேவகனாக இருக்கையில், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவு குரல் கருநாடகத் தமிழர்களிடம் உரத்த சிந்தனையை தூண்டியுள்ளது.
மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம்: கன்னட முற்போக்காளர்கள்
பதிந்தவர்:
தம்பியன்
23 July 2009
0 Responses to மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது பிரபாகரனின் வீரம்: கன்னட முற்போக்காளர்கள்