இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக் கோரி வரும் 29ம் தேதி தர்ணா போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநில செயலாளர் என்.வரதராஜன், அகில இந்திய கட்டுபாட்டுக் குழு தலைவர் என்.சங்கரய்யா, மத்தியக் குழு உறுப்பினர்கள் உமாநாத், ரங்கராஜன் எம்.பி. உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்து 3 மாத காலம் கடந்த பின்னரும், அங்கு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள நிலை தொடர்கிறது.
முகாம்களில் மோசமான நிலைமை பற்றிய செய்திகளும், மழை வெள்ளம் காரணமாக நேரிட்டுள்ள அவலங்களும், கவலை அளிப்பதாக உள்ளன. தமிழ் மக்களை அவர்களது சொந்த குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் குடியமர்த்துவதற்கான பணிகளை இலங்கை அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது. அந்த மக்களுக்கான் நிவாரண உதவிகளோ, மருத்துவ வசதிகளோ, நீக்கப்படாத துயரங்களாக தொடர்கின்றன. ஜூலை மாதத் துவக்கத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்னரும் கூட, இலங்கை தமிழர் பிரச்சனையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொள்ள மறுத்து வருகிறது.
இந்நிலையில், முகாம்களில் உள்ள தமிழ் மக்களை சொந்த இடங்களில் மீள் குடியமர்த்துவது, அந்த மக்களின் மனித உரிமைகள் மீறப்படாமல் பேணுவது, அதிகாரப் பரவல் சுயாட்சி உரிமையை உள்ளிடக்கிய அரசியல் தீர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 29ம் தேதி தர்ணாப் போராட்டம் நடத்துவது.
2. தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம், ஜனநாயக உணர்வு படைத்த வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பு என்ற கோஷத்தை ஏற்கவில்லை என்பதை காட்டுகிறது. எனினும், ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான வாக்குகள் கணிசமாக பதிவாகியுள்ளன.
தேர்தலில் பங்குகொண்டு ஜனநாயக கடமையாற்றிய மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ள மக்களுக்கு மாநில செயற்குழு நன்றியை தெரிவிக்கிறது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக் கோரி 29ம் தேதி தர்ணா போராட்டம்: மா.கம்யூ.
பதிந்தவர்:
தம்பியன்
22 August 2009
0 Responses to இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக் கோரி 29ம் தேதி தர்ணா போராட்டம்: மா.கம்யூ.