தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று ராமேஸ்வரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி துன்புறுத்தி வருகின்றனர். மேலும் மீனவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்தும், வலைகளை அறுத்து எறிந்து கடலில் வீசி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் மீனவர்கள் பலத்த நஷ்டம் அடைவதோடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தொடர் தாக்குதல் நடவடிக்கையை கண்டித்தும், பாக்ஜலசந்தி, மன்னார் கடல் பகுதியில் தமிழக மீனவர்களுக்கான மீன்பிடி உரிமையை பெற்று தர கோரியும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 5 மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி தொழிலை நம்பி இருந்த ஐஸ் கம்பெனிகள், லேத் பட்டறைகள் மூடி கிடக்கின்றன. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.
0 Responses to இலங்கை கடற்படையை கண்டித்து உண்ணாவிரம்