தான் எந்தச் சூழ் நிலையிலும் ஒரு போதும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
"நான் ஒரு இராணுவ வீரன், அரசியல்வாதி அல்லன். நான் இராணுவக் கடமையிலிருந்து ஓய்வுபெற்ற பிற்பாடு ஒரு சாதாரண சிறிலங்காவின் குடிமகனாக மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன். இராணுவத்தில் இருந்த காரணத்தால் வாழ்க்கையில் இழந்த சந்தோசமான காலங்களை மீண்டும்பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று அவர் ஆங்கில இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: "நான் அரசியலில் வெகு விரைவில் ஈடுபடப் போகிறேன் என்று வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. நான் அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்று எந்தப் பத்திரிகைகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிக்கைகள் அனுப்பிவைக்கவில்லை. முப்படைகளின் பிரதான அதிகாரியாகப் பொறுப்புடன் உயர் பதவி வகிக்கும் நான் அப்படியொரு அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் அளவுக்கு முட்டாள் அல்லன்.
எனக்கு அரசியலில் பிரவேசிக்கும் எண்ணமோ, நோக்கமோ கிடையாது. எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது என்று வெளியாகியிருக்கும் செய்திகளிலும் உண்மை இல்லை என்றார்.
எனினும், கடந்த காலங்களில் இவர் தமிழ் மக்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களில் இனவாதம் பொதிந்திருந்தது. சிறிலங்காவின் தலைவர்களில் ஒருவராக வரும் நோக்குடனேயே இவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வந்ததாகவும், எனினும் தற்போது இவரது பதவியின் ஆளுமை குறைக்கப்பட்டு இவருக்கான பாதுகாப்புகளும் மகிந்த ராஜபக்ச சகோதரர்களினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளானது இவரது அரசியல் கனவை கலைப்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவே ராஜபக்ச சகோதரர்களால் மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுவது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
நன்றி, சங்கதி.
0 Responses to 'இந்தப் பழம் புளிக்கும்' எனக்கு அரசியல் வேண்டாம்-