இலங்கை அரசால் பெயர் குறிப்பிடப் படாத நாடொன்றில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டவர் பத்மநாதன் தான் என்பது இப்போது உறுதி செய்யப் பட்டுள்ளது.
கைதா? கடத்தலா?
பத்மநாதனைச் சார்ந்தோர் அவர் கடத்தப் பட்டுள்ளதாகச் சொல்கின்றனர். கைது என்பது குற்றப் பத்திரிகை சமர்பித்து நீதிமன்ற ஆணையின் படி செய்யப் படுவது. அப்படி ஏதும் நடக்காததால் இது கடத்தலே.
எப்படி மாட்டியிருப்பார் பத்மநாதன்?
பல ஆண்டுகளாக சர்வதேசக் காவற்துறையால் கைது செய்ய முடியதவரை எப்படி பிடிக்க முடிந்தது. இச் சதியில் இன்னும் ஒரு நாடு நிச்சயம் சம்பத்தப் பட்டுள்ளது. அது தாய்லாந்து அல்ல என்பது உறுதி செய்யப் பட்டுளது. விடுதலைப்புலிகளின் தலைவர் செல்வராசா பத்மநாதன் அல்லது கே.பி. யின் கைது தொடர்பாக வெளியான செய்தி குறித்து விபரங்களை வழங்குமாறு தாய்லாந்தின் பாதுகாப்பு முகவர் அமைப்புகளுக்கு அந்நாட்டுப் பிரதமர் அபிசித் வெஜ்ஜஜீவா நேற்று வெள்ளிக்கிழமை உத்தவிட்டார். தனது நாட்டுக் குடிமகனின் கைதை அவர் சர்வதேச காவற் துறையால் வேண்டப் பட்டவராக இருந்தும் பிரதமர் அக்கறை எடுத்திருப்பது தாய்லாந்து இந்தியாவைப் போல் ஒரு மானம் கொட்ட நாடு அல்ல என்பதைக் காட்டுகிறது. இந்தியக் குடிமக்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப் படுவதை இங்கு கவனிக்கவும். தாய்லாந்து இதில் சம்பந்தப் படாததால் சந்தேகம் மலேசியாவின் மீது தான் ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் பத்மநாதன் குற்றமிழைத்தவர் அல்ல. மலேசியாவோ அல்லது வேறு ஒரு நாடோ தன் மண்ணிற்கு வந்த ஒரு வெளிநாட்டவரை அவர் விருப்பத்திற்கு மாறாக இன்னோரு நாட்டினர் வந்து கடத்திச் செல்ல அனுமதிப் பது சட்ட விரோதம். இந்தச் சட்டவிரோதச் செயலுக்கு சம்பந்தப் பட்ட நாட்டை தூண்டும் வலு இலங்கைக்கு இல்லை இலங்கையுடன் இன்னொரு நாடு அல்லது நாடுகள் இதில் சம்பந்தப் பட்டிருக்கவேண்டும். கடைசியாக பத்மநாதனைச் சந்தித்த வர்மன் அந்நாடு மலேசியாவே என்று உறுதி செய்துள்ளார். அவர் யாரையோ சந்திக்கச் சென்றவிடத்திலேயே கடத்தப் பட்டுள்ளார். அவரை யாரோ பேச்சு வார்த்தைக்கு வரச்சொல்லி அழைத்தே கடத்தியுள்ளனர். இலங்கை அப்படி அழைப்பு விடுத்தால் அதை பத்மநாதன் இலேசில் நம்பியிருக்க மாட்டார். அண்மைக்காலமாக பத்மநாதன் இந்தியாவின் ஆதரவை தமிழர்களுக்கு வேண்டி அறிக்கைகள் விட்டுள்ளார். அவரை பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்த நாடு பெரும்பாலும் இந்தியாவாகத்தான் இருக்க வேண்டும்.
பத்மநாதனுக்கு என்ன நடக்கும்?
பத்மநாதன் நீதிமன்றில் நிறுத்தப் பட்டால் அவர் கடத்தலில் சம்பந்தப் பட்ட மூன்றாம் நாட்டின் சதியும் அம்பலமாகும். அது அந்த நாட்டிற்கு எதிராக சட்டச் சிக்கலை உருவாக்கலாம். இப்போதைக்கு இலங்கையில் அவசிய தேவை பத்மநாதனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் நிதிக் கட்டமைப்பை கைப்பற்றுவது அல்லது சிதைப்பதாகவே இருக்கும். அதற்கு அவருக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பதாலே சாத்தியம். நீதிமன்றில் சமர்ப்பித்தால் இவ் வன்முறைகள் வெளிவரும். பத்மநாதனை நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கான் சாத்தியங்கள் குறைவு. இவரின் மீது இலங்கைப் படை அதிகாரிகளுக்கு இருக்கும் ஆத்திரம் சொல்லில் அடங்காது. ஆகையால் அவருக்கு குட்டிமணி, தங்கத்துரை போன்றோருக்கு ஏற்பட்ட முடிவே பத்மநாதனுக்கும் நடக்கும்.
இந்தியாவிடம் பத்மநாதனக் கையளிக்க இலங்கை தயார் என்று கூறியுள்ளது ஆனால் இந்திய வெளியுறவுத் துறை இதுவரை பத்மநாதன் கைது தொடர்பாக எதுவும் தெரிவித்ததாக தெரியவில்லை.
0 Responses to பத்மநாதனுக்கு என்ன நடந்திருக்கலாம்? என்ன நடக்கும்?