பிரபாகரனுடன் நடைபெற்ற கடைசி உரையாடலின் ஒரேயொரு சாட்சி !இறப்பதற்கு முன் விடுதலைப்புலிகள் யாரை நம்பி முள்ளி வாய்க்காலுக்குள் நுழைந்தார்கள், இப்போது யாரை நம்பி கே.பி. மலேசிய கோட்டலுக்குள் நுழைந்தார் ? இரண்டிற்கும் என்ன தொடர்பு ?
கே.பி கைதானது தாய்லாந்தில் அல்ல மலேசியாவில் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.பியின் ஆதரவு இணையத்தளம் ஒன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உள்ள மஜீத் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் இருவரைச் சந்தித்துவிட்டு தொலைபேசி செய்ய வெளியே சென்றவேளை இவர் கடத்தப்பட்டுள்ளார்.
யார் அந்த இருவர் ஏன் சென்றார்கள் ?
கே.பியை சந்திக்கச் சென்ற இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலஞ்சென்ற அரசியல் துறை பொறுப்பாளரான பா.நடேசனின் சகோதரரும், மகனுமார் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது. இதுதவிர மேலும் பலர் விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட மேலை நாடுகளின் நிர்வாகம் தொடர்பான தகவலையும் புதிய பதவிகளையும் பெற மலேசியா சென்றுள்ளார்களா என்பது அடுத்த கேள்வியாகும். இந்த மலேசிய சந்திப்புக்களால் ஏற்பட்ட பொறியே கே.பி.யை வசமாக சிக்கவைத்திருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.
கே.பி.கைது செய்யப்பட்ட முறை எப்படியானது?
குர்டிஸ்தானிய தலைவர்களில் ஒருவரான ஒச்சலான் அமெரிக்க, துருக்கிய உளவுப் பிரிவினரால் கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இன்றுவரை விடுதலையாகவில்லை. மேலும் அமெரிக்க உளவு விமானங்கள் பல பயங்கரவாத சந்தேக நபர்களை திடீரென கடத்திச்சென்ற நிகழ்வுகளும் நம்மால் மறக்க முடியாத நிகழ்வுகளே. அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதற்கு இன்றுவரை தகவல்கள் இல்லை.
இதே பாணியில்தான் ஓர் அதிரடி உளவுப்பிரிவு நடவடிக்கை மூலம் கே.பி. கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர் உடனடியாக உலங்குவானூர்தி மூலம் சிறீலங்கா கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் கே.பி கைது நடந்துவிட்டது என்பதற்கு முன்னோட்டமாக சிறீலங்கா பிரதமரின் பேச்சு நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. விடுதலைப்புலிகள் மறுபடியும் குழுமப்பட முயல்வதாகவும் தம்மால் அது முறியடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அவர் கே.பி.கைதை அறிந்துதான் அக்கருத்தை வெளியிட்டிருக்கலாம் என்றே எண்ண முடிகிறது. இல்லாவிட்டால் அக்கருத்தை அவர் கூறியிருக்க நியாயமில்லை.
முள்ளி வாய்க்காலுக்குள் விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட முன்னர் சிரியாவில் இருந்து நாடு திரும்பி விமான நிலையத்தில் உள்ள மண்ணை தொட்டு வணங்கினார் மகிந்த ராஜபக்ஷ. ஆனால் அதன் முன்னரே விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட செய்தியை அவர் அறிந்துள்ளார்.
கே.பி இப்பொழுது மட்டுமா கைதாகிறார்?
கே.பி இதற்கு முன்னரும் ஒரு தடவை கைது செய்யப்பட்டதாக பரபரப்பு செய்தி வெளியானதும், பின்னர் அவர் பெரும் பணம் கொடுத்து தப்பியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த விவகாரம் குறித்து கே.பி. வழங்கிய யாதொரு செவ்வியிலும் குறிப்பிடவில்லை அவரிடம் யாரும் கேட்கவும் இல்லை. இப்போது அதே பாணியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதையே காண முடிகிறது.
இப்படியான ஆபத்தில் இருக்கும் ஒருவரை விடுதலைப் புலிகள் ஏன் தேர்வு செய்தார்கள்?
இப்படியாக கே.பி. உளவுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை ஆசியாவின் இன்ரபோல் பிரிவும் உறுதி செய்துள்ளது. சர்வதேச போலீசாரினால் தேடப்படும் ஒருவரை விடுதலைப் புலிகள் ஏன் தமது தொடர்பாளராக அறிவித்தார்கள் என்பது இன்றுவரை துலங்காத கேள்வியாகவே இருக்கிறது. அதேவேளை இப்படியான சட்ட நெருக்கடிக்குள் இருக்கும் ஒருவர் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் தானே இருக்கப்போகிறேன் என்று எதற்காக அறிவித்தார். அப்படி ஒரு அறிவிப்பிற்கு பக்கபலமாக இருந்த பின்னணி என்ன ? அதை நம்பி அடுத்த கட்ட பணியில் இறங்கியவர்கள் விடுதலைப் புலிகள் சிலரின் துரப்பார்வை என்னவென்பது அடுத்த கேள்வியாகும்.
பிரபாகரனுடன் நடைபெற்ற உரையாடலின் ஒரேயொரு சாட்சி !
முள்ளி வாய்க்காலுக்குள் நடைபெற்ற கடைசிநேர நிகழ்வுகள் குறித்த உரையாடல்களை பிரபாகரனுடன் நடாத்தியவர் கே.பி மட்டுமே. அங்கு நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளும் அறிந்த ஒருவராக அவர் இருந்தார். கே.பியின் கருத்துக்கள் பல தடவைகள் முரண்பாடாக இருந்துள்ளன. ஒரு தடவை பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் பின் இருப்பதாகவும் அடுத்து இறந்துவிட்டதாகவும் இவர் கூறியுள்ளார். எனினும் பல துலங்காத கேள்விகளுக்கான பதில்கள் அவருடைய குழப்பமான பதில்களுக்குள்ளேயே மறைந்திருப்பதும் தெரிந்தது. எனினும் பல கேள்விகளுக்கு பதில் தர வல்லவராக அவர் இருந்தார் என்பதை மறுக்க இயலாது, இப்போது அந்த உண்மைகளும் வெளிவர வாய்ப்பில்லாமல் போய்விட்டன.
01. முள்ளி வாய்க்கால் அத்தாங்கு போன்ற நிலப்பரப்பு அதற்குள் புகுந்தால் எந்தப்படையணியும் தோல்வியடையும். பிரபாகரன் மக்களுடனும் குடும்பத்தினருடனும் அந்தப் பொறிக்குள் நுழைந்து மாபெரும் தவறை ஏன் நிகழ்த்தினார்.
02. முள்ளி வாய்க்காலை நெருங்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் உண்மையாகத்தான் அங்கு போனதா ? அப்படி போன கப்பல் திரும்பியது ஏன்? இவைகளின் உண்மை நோக்கமென்ன ?
03. தன்னை கைது செய்ய மாட்டார்களென்று உறுதியாக நம்பியே கே.பி நடந்துள்ளார். சனல் 4, தமிழழோசை, கனேடிய வானொலிகளுக்கு அவர் தொடர்ச்சியான பேட்டிகளை வழங்கினார். ஒரு தொலைபேசி உரையாடல் இருந்தாலே போதும் சர்வதேச போலீஸ் அந்த இடத்திற்கு வரும் என்று தெரிந்தும் எதற்காக அவ்வாறு செய்தார். மேலும் கைதான இடம் பாதகமான ஒரு மையம், அங்கு வந்திருக்கும் இருவருடைய நடவடிக்கையை போலீசார் கண்காணிப்பர் என்பது கே.பிக்கு தெரியாதா ?
04. இறப்பதற்கு முன் விடுதலைப்புலிகள் யாரை நம்பி முள்ளி வாய்க்காலுக்குள் நுழைந்தார்கள், இப்போது யாரை நம்பி கே.பி. மலேசிய கோட்டலுக்குள் நுழைந்தார் ?
05. கே.பி, செல்வராஜா பத்மநாதன் இருவரும் ஒருவரா ? வெளியான மூன்று புகைப்படங்களில் உள்ளது ஒருவரா?
இப்படியாக பதிலற்ற கேள்விகளும், ஊகங்களும் இனி உலாவரப்போகின்றன. கே.பியின் கைது அவருடன் சேர்ந்த மேலும் பல உண்மைகளின் தேடலுக்கு பயன்படும், இதன் தொடராக பல சம்பவங்கள் மேலும் நடைபெறலாம்.
ஆப்கானின் இப்போதய ஆட்சியாளர் முகமட் கர்சாய் தலபான்களால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின் அவரே தப்பிவிட்டதாக செய்தி வந்தது, தொடர்ந்து அவரே ஆப்கான் அதிபராவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இது ஒரு சம்பவம் அல்லது எடு கோள்.
அதுபோல கே.பி கைது உண்மையா பொய்யா ? நாடகமா ? என்பதை அறிய அதிக நாட்கள் ஆகாது என்பதற்கு மூன்று நாட்களில் முடிந்த முள்ளி வாய்க்காலை விட வேறென்ற சாட்சியம் வேண்டும்.
நன்றி: அலைகள்
கே.பி கைது உண்மையா பொய்யா ? நாடகமா ? எதுவுமே அதிக நாட்கள் தாங்காது!
பதிந்தவர்:
தம்பியன்
07 August 2009
0 Responses to கே.பி கைது உண்மையா பொய்யா ? நாடகமா ? எதுவுமே அதிக நாட்கள் தாங்காது!