Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் நேற்று முன்நாள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்தும் வேறு தொடர்புகள் ஊடாகவும் சேகரித்த தகவல்களில் இருந்து தெரியவருவதாவது:

நேற்று முன்நாள் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன்' (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த - தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார்.

பிற்பகல் அளவில் - ஜலான் ரொன்கு அப்துல் ரஹ்மான் (Jalan Tuanku Abdul Rahman) வீதியில் இருக்கும் குறிப்பிட்ட அந்த 'ரியூன்' விடுதிக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், அவர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார்.

பின்னர் - பிற்பகல் 2:00 மணியளவில் - தனக்கு வந்த ஒரு செல்லிடப்பேசி அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது உணரப்பட்டது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி - செல்வராஜா பத்மநாதன் மலேசிய புலனாய்வுத்துறை அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகவே குறிப்பு உணர்த்துகின்றன.

அதே வேளையில் வேறு ஒரு பெரிய வெளிநாட்டு உளவுத்துறையின் ஆசீர்வாதமும் அனுசரணையும் கூட இந்தக் கடத்தலுக்கு இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் தமிழர் வட்டாரங்களில் நிலவுகின்றது.

இதே வேளையில் செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா அரச வட்டாரங்கள் நேற்று கொழும்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இருந்த போதும் - இந்தக் கடத்தலுடன் மலேசிய பதுகாப்பு மற்றும் புலனாய்வு வட்டாரங்களுக்கு இருக்கும் தொடர்பை மறைத்து திசை திருப்பும் நோக்குடனேயே இவ்வாறு தகவல் வெளியிடப்படுகின்றது என்றும் கருதப்படுகின்றது.

இதே வேளையில் கொழும்பில் இருக்கும் செய்தியாளருக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், செல்வராஜா பத்மநாதன் நேற்று வானூர்தி மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன.

0 Responses to செல்வராஜா பத்மநாதன் கோலாலம்பூரில் கடத்தல்: மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறை கூட்டுச்சதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com