அறிவியல்துறை வளர்ச்சியில், ஊடகப் பங்காற்றல் குறித்தான அக்கறை பெரும் பங்கு வகிக்கிறது. சமூகப் பிரக்ஞை, விழிப்புணர்வில் பதிவாகி, இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினுடு மக்களிடம் சென்றடைகிறது.
தேடல்களின் பொது மையமாக, ஊடகங்கள் மாறவேண்டுமென்கிற கருத்து நிலையயான்றும் உண்டு.சிந்தனை முறைமைகளின் வளர்ச்சி நிலை விரிவடைந்து, பல தளங்களை பரப்பிச் சென்றாலும், அவையாவும் சமூக வாழ்வின் முற்போக்கான வாழ்நிலைகளை இனங்காட்டும் திசையறிகருவிகளாக இருத்தலே சிறப்பானதாகவிருக்கும்.
அத்தகைய சமூக அக்கறை கொண்ட ஊடகத் தளங்கள் உருவாக்கப்படவேண்டுமென்கிற உந்துதல், இந்த "ஊடக இல்ல' உருவாக்கிகளுக்கும் இருக்கவேண்டுமென்பதே பரந்துபட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
"கருத்துக் கூறுதல்' என்கிற விமர்சனப் போக்கு, வாழ்வின் அசைவியக்கப் படிநிலைகளில் ஒளிந்திருக்கும் அறஞ்சார்ந்த பண்புருவங்களை வெளிக்கொணரும் வீச்சினை உள்ளடக்குவதோடு "எதிர்த்துக் கூறுதல்' என்கிற குறுகிய வட்டத்துள் வீழ்ந்து விடாது ஆரோக்கியமிக்கதாகப் பயணிக்க வேண்டும்.
புலம் பெயர் தமிழ் ஊடகப் பரப்பு, மிகவும் இக்கட்டானதொரு காலகட்டத்தைக் கடந்து செல்லும் இவ்வேளையில், ஊடக இல்லத்தின் இலக்கும், செயற்பாடுகளும், மக்களின் அறிவியல் சார்ந்த தேடல்களுக்கு, காத்திரமானதொரு சிந்தனைக் களமாக அமைவது நன்று.
கண்ணிற்குப் புலப்படாத, ஒளி மிகுந்த முற்போக்குச் சிந்தனைகள் நிறைந்து காணப்படும் மறைவிடங்களைத் தேடிச் செல்லும் வாசகர்களை, அவர்களின் கரம்பிடித்து, அழைத்துச் செல்லும் உன்னத பணியை, இந்த "ஊடக இல்லம்' நிறைவேற்றுமென்று நம்புவோம்.
பயணிக்கும் இலக்கு ஒன்றாக இருந்தாலும், அதை நோக்கி நகரும் சமாந்தரமான மாற்றுச் சிந்தனைக் கோடுகளையும் உள்வாங்கி, சமூக விடுதலை விரும்பிகளின் கருத்தாடல்களுக்கும் இந்த இல்லத்தில் இடம் தர வேண்டும்.
எமது சமூக கலை, கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் இன்னமும் ஓட்டிக்கொண்டிருக்கும் பிற்போக்குத் தனங்களை அறுத்தெறிந்து, இனத்தின் நிமிர்வில்மானுடத்தின் உன்னதங்கள் ஒளிவீசிடச் செய்ய வேண்டும்.
அதற்கான பணியினை நேர்த்தியாகச் செய்திடும் வல்லமையை, ஊடக இல்ல நிர்வாகிகள் பெறுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
இதயச்சந்திரன்



0 Responses to ஊடக சுதந்திரத்தின் ஊற்றுக் கண்ணாக வேண்டும்