Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினையின் காரணமாக தமிழகம் வந்த அகதிகள் விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதிகள் முகாமிலும் விருப்பத்தின்பேரில் தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2006 ஜனவரி 12ம் தேதிக்கு பின்னர் தற்போது வரை தமிழகம் வந்துள்ள இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களுக்கு மாத செலவுக்காக தமிழக அரசு பணக்கொடை மற்றும் தங்குவதற்கு இலவச வீடு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

இருந்த போதும் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலைவசதி ஆகியவற்றை முறையாக பராமரிப்பதில் அரசு அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது கிடையாது. இதனால் பல வருடங்களாக அகதிகள் முகாமில் சாலைவசதி, தெருவிளக்கு வசதி இல்லாமல் அவதியில் வாழ்ந்து வருகின்றனர். ஓட்டை, உடைசலான வீடுகளில் வாழும் அகதிகள் மழைக்காலங்களில் நனைந்து சிரமப்படுகின்றனர்.

மண்டபம் அகதிகள் முகாம் பகுதியில் போதிய வேலைவாய்ப்பு வசதி இல்லை. இப்பகுதியின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. இலங்கை அகதிகளுக்கு தமிழகத்தில் உள்ள மீனவர் அடையாள அட்டை வழங்க முடியாது என்பதாலும், கடல் மார்க்கத்தில் கடத்தல் சம்பவங்கள் நடை பெறுவதாலும் இலங்கை அகதிகள் கடலுக்கு செல்வது மிகவும் குறைவாக உள்ளது.

இந்நிலையில் தங்களுடைய அன்றாடத் தேவைக்காக பெரும்பாலான இலங்கை அகதிகள் கடற்கரையிலிருந்து மீன்களை வாங்கி வந்து விற்பனை செய்தல், கட்டட வேலைகளுக்கு செல்லுதல், மளிகை வியாபாரம் போன்ற பல தொழில்களை செய்து வருகின்றனர்.

தங்களுடைய அன்றாட தேவைக்காக நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அகதிகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள வீடுகளை பழுது பார்ப்பது என்பது முடியாத காரியம்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘பல வருடங்களாக மராமத்து பணிகள் மேற்கொள்ளாத காரணத்தால் வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இந்த வீடுகளில் வசிப்போருக்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்’, என்றனர்.

நன்றி: நக்கீரன்

0 Responses to இலங்கை அகதிகளின் வீடுகள் இடிந்து விழும் அபாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com