ஐ.நா சபையின் சிறுவர் நிதிய (யுனிசெவ்) சிறீலங்காப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட தொலைபேசி மிரட்டல்களை அடுத்து, அவர் உரிய நாளுக்கு முன்னதாகவே கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பை விட்டு அவசரமாக வெளியேறி விட்டார்.
இன்றுவரை நாட்டில் தங்கியிருப்பதற்கு அவருக்கு அனுமதி இருந்தது. இடம்பெயர்ந்த மக்களின் குறிப்பாக பெண்கள், சிறுவர்களின் நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு ஜேம்ஸ் எல்டர் தெரிவித்த கருத்துக்களை அடுத்து, அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி சிறீலங்கா அரசு உத்தரவிட்டிருந்தது.
அவர் விடுதலைப் புலிகளின் பரப்புரைக்கு ஆதரவாக ஊடகங்களுக்குத் தகவல்கள் வழங்கி வந்தார் என அரச அதிகாரிகளினால் குற்றம்சாட்டப்பட்டார். இந்த மாதம் 7 ஆம் திகதிக்குள் அவர் வெளியேற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தபோதும், அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து இன்று வரை அவர் நாட்டில் தங்கியிருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து எல்டருக்கு அநாமதேய மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் பல விடுக்கப்பட்டன என்றும், அதனால் ஐ.நாவின் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரியிடம் மிரட்டல்கள் குறித்து முறையிட்டுவிட்டு, திட்டமிடப்பட்டதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே அவர் கொழும்பில் இருந்து அவசரஅவசரமாக புறப்பட்டு விட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மாத காலத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட இரண்டாவது ஐ.நா. அதிகாரி ஜேம்ஸ் எல்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வாரங்கள் முன்னதாக ஐ.நா.வின் மற்றொரு அதிகாரியான பீற்றர் மக்கெய்ன் வெளியேறி இருந்தார். அவருக்கான விசாவை நீடிப்பதற்கு சிறீலங்கா அதிகாரிகள் மறுத்ததைத் தொடர்ந்தே அவர் வெளியேறினார்.
எனினும், மக்கெய்னின் விவகாரம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பி.பி.அபயக்கோனும் தெரிவித்தமை அறிந்ததே.
மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் - யுனிசெவ் சிறீலங்காப் பேச்சாளர் அவசரமாக வெளியேறினார்
பதிந்தவர்:
தம்பியன்
21 September 2009



0 Responses to மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் - யுனிசெவ் சிறீலங்காப் பேச்சாளர் அவசரமாக வெளியேறினார்