நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பன நடைபெறவுள்ளமையால் அரசு தமிழ்மக்கள் விடயத்தில் கவனம் செலுத்துகின்றதே தவிர தமிழ்மக்களின் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லையென தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் லின்பாஸ் கோவிடம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்தும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் லின் பாஸ்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு பிரதித் தலைவர் மாவை சேனாரதிராஜா யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் வில்லியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறீலங்கா அரசு அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குமானால் ஐக்கிய நாடுகள் சபை அதற்கு உதவியளிக்கும். மக்களைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியுள்ளோம் என்று லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனவரி மாதத்திற்கு முன்னர் மக்களை மீள குடியமர்த்துவதாக ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்தார் எனவும் அவர் தெரிவித்தார். மக்களை மீளக்குடியமர்த்தல் அரசியல் தீர்வு ஆகிய விடயங்கள் உட்பட சகல விடயங்கள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை அரசுடன் பேசும் என்றும் இதேவேளை தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக லின் பாஸ்கோவிடம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்திருந்தனர்.
சிறீலங்கா அரசு அரசியல் தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. இது வரைகாலமும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி தீர்வு ஒன்றை முன்வைக்க விரும்பாத அரசு இனிமேலும் தீர்வை முன்வைக்கும் என எதிர்பாக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்பன நடைபெறவுள்ளமையால் அரசு அதில் கவனம் செலுத்துகின்றதே தவிர அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை.
அதன் காரணமாக அரசியல் தீர்வு ஒன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரித்து வருகின்றது. அந்தத் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேவேளை, இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துகின்ற நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை உதவிபுரிய வேண்டும். இந்த விடயங்களில் அரசு எவரையும் அனுமதிக்காது தானே செய்து வருகின்றது.
இதனால் காலதாமதம் ஏற்படும். கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள தொண்டு நிறுவனங்களின் உதவிகள் தேவை. ஆனால் அரசு அதற்கு அனுமதி வழங்க மறுக்கின்றது. எனவே ஐக்கியநாடுகள்அந்த விடயத்தில் கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும். கண்ணி வெடிகள் இல்லாத பிரதேசங்களில் கூட மக்கள் இன்னமும் குடியமர்த்தப்படவில்லை.
மழைகாலம் ஆரம்பமாகவுள்ளது இந்த நிலையில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லையானால் மக்கள் இன்னல்களை எதிர்நோக்குவார்கள். 180 நாள்களுக்குள் மீள்குடியேற்றம் இடம்பெறும் என அரசு இந்தியாவுக்கு உறுதியளித்திருந்தது.
விடுவிக்கப்பட்டவர்களும் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை அவ்வாறு உறுதியளித்து 100 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை. அங்குள்ள மக்களில் மிகவும் குறைந்தளவிலானோரே முகாமில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிலும் அனேகமானோர் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கூட இன்னமும் பாதுகாப்புத் தரப்பு அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் வவுனியா முகாமில் உள்ள மக்களை அரசு துரிதமாக மீளக்குடியமர்த்தும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. முகாம்களில் உள்ள மக்களை சென்று பார்வையிட்டு உதவிகளை வழங்குவதற்கு கூட அரசு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
உண்மையில் அரசுக்கு அக்கறை இருக்குமானால் நல்ல அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முகாம்களுக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை செல்ல அனுமதித்து குடியேற்ற விடயங்களிலும் எங்களின் ஒத்துழைப்புகளைப் பெற்று நல்லெண்ணத்தை அரசு வெளிப்படுத்த வேண்டும்.
ஆனால் அவ்வாறு எந்தவிதமான ஆரோக்கியமான முயற்சிகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்று லின்பொஸ்குவாவிடம் தமிழ்தேசியக்கூட்டமைப்பு எடுத்துரைத்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தேர்தல்களை முன்னிட்டே அரசு தமிழ்மக்கள் விடயத்தில் கவனம் செலுத்துகின்றது: தமிழ்தேசியக் கூட்டமைப்பு
பதிந்தவர்:
தம்பியன்
21 September 2009



0 Responses to தேர்தல்களை முன்னிட்டே அரசு தமிழ்மக்கள் விடயத்தில் கவனம் செலுத்துகின்றது: தமிழ்தேசியக் கூட்டமைப்பு