Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூத்த ஊடகவியலாளரான திஸநாயகத்துக்கு எதிரான இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனைத் தீர்ப்பு உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச மட்டத்திலும் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. பல தரப்பினரையும் விசனத்துக்குள்ளாக்கியுமிருக்கின்றது.

இந்தத் தீர்ப்பு வெளியான கையோடே இந்தத்தீர்ப்புக் குறித்து அமெரிக்கா அதிருப்தியும் ஏமாற்றமும் வெளியிட்டிருக்கின்றது. அதேசமயம், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், ஊடக சுதந்திரத்துக்கான சர்வதேச இயக்கங்களும் இந்த விடயத்தில் இலங்கை அரசின் போக்கைக் கடுமையாகக் குறைகூறிக் கண்டித்துமிருக்கின்றன.

ஊடகவியலாளர் திஸநாயகத்தின் விடயத்தில் முழு உலகின் கவனமும் ஆழப் பதிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.நான்கு மாதத்துக்கு முன்னர் மே மாதம் 3 ஆம் திகதி வந்த சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை ஒட்டி செய்தி வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அதில் ஊடகவியலாளர் திஸநாயகத்தைப் பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டியிருந்தார்.

தன்னுடைய ஊடகப் பணியைச் செய்தமைக்காகக் குற்றம் சுமத்தப்பட்ட ஊடகவியலாளர் என்ற நிலைமைக்கு குறியீட்டு உதாரணமாக திஸநாயகம் திகழ்கின்றார் என ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருந்தார்.

அதிலிருந்தே, திஸநாயகத்தின் விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு எத்தகையது என்பது வெளிப் படையாகப் புலப்படுத்தப்பட்டு விட்டது. எனவே, இத்தகைய இருபது வருட கடூழியச் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டதும் அது குறித்து அமெரிக்கா கடும் அதிருப்தியும், ஏமாற்றமும் வெளியிட்டமையில் புதிதாக ஆச்சரியம் ஏதுமில்லை.

"திஸநாயகத்துக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு இலங்கைச் சட்டங்களின் படியே நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. அது,சட்ட மற்றும் நீதிப்படியான நடவடிக்கை. அதற்கு அரசு பொறுப்பல்ல. சட்டத்தையும், நீதியையும் காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. அதற்கு அரசைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை." என்றெல்லாம் கொழும்பு ஆட்சிப் பீடத்தால் இப்போது விளக்கம் வியாக்கியானம் சமாதானம் எல்லாம் கூறப்படலாம்.

ஆனால் அத்தகைய சமாதானங்கள் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசத் தரப்புகளை தாஜா செய்யுமா, அவற்றின் சீற்றத்தைத் தணிய வைக்குமா என்பவையெல்லாம் போகப் போகத்தான் தெரியவரும். ஆனாலும், இலங்கை விவகாரத்தில் குறிப்பாக இலங்கை இனப்பிரச்சினை விடயத்தை கொழும்பு அரசு கையாளும் விதம் மற்றும் முறைமை குறித்து ஏற்கனவே கடும் அதிருப்தியை அமெரிக்கா வெளியிட்டு வருகையில் அந்த அதிருப்தித்தீக்கு எண்ணெய் ஊற்றுவது போல இந்தத் தீர்ப்பு வந்திருக்கின்றது.

இலங்கை அரசின் போக்குக் குறித்து கடந்த மாதம் முழுவதும் பல தடவைகள் அமெரிக்கத் தரப்பிலிருந்து ஆழமான கண்டிப்புடன் கூடிய கருத்துக்கள் இராஜதந்திர வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டு வந்தன. இப்போது திஸநாயகத்துக்கு எதிரான கடுமையான தண்டனைத் தீர்ப்பு வெளியான கையோடு பிறிதொரு தகவலும் அமெரிக்கத் தரப்பிலிருந்து கசிய விடப்பட்டிருக்கின்றமை கவனிக்கத்தக்கதாகும்.

இந்த ஆண்டின் முற்பகுதியில் வன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருந்த சமயத்தில் அங்கு இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் அலுவலகம் தயாரித்து வருகின்றது என்றும், அந்த அறிக்கை பெரும்பாலும் இம்மாதம் 21 ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தகைய அறிக்கை வெளியாகுமானால், அது கொழும்பையும் அதன் ஆட்சியாளர்களையும் எவ்வளவு தூரம் சர்வதேசச் சிக்கல்களில் மாட்டிவிடும் என்பதே இன்றைய நிலையில் பிரதானமாகும். இறுதிப் போரின்போது இருபதாயிரத்துக்கும் அதிக மான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா. சபை யின் உள்ளக அறிக்கைகளை மேற்கோள்காட்டி லண்ட னில் இருந்து வெளியாகும் "ரைம்ஸ்" சஞ்சிகை செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட வில்லை என்ற விளக்கமோ அல்லது சிவிலியன்கள் படுகொலைகளுக்கு விடு தலைப்புலிகள்தான் அவர்கள் மட்டும்தான் காரணம் என்று கொழும்பு அரசுத் தரப்பினால் கூறப்படும் கற்பிதங்களோ அல்லது யுத்தம் ஒன்றில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுச் சுமத்தப்படுவதில்லை என்பதே பொதுவான மரபு என இலங்கை வெளிவிவ கார அமைச்சின் செயலாளராக இருந்த பாலித கோஹன்ன போன்றோர் கூறும் சமாதானமோ இவ்விடயத்தில் இலங்கையைக் காப்பாற்றி, காபந்து பண்ணுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் சர்வதேசத்தின் பக்கத்திலிருந்து இலங்கையைச் சூழ்ந்து வரும் கருமேகங்கள், பெரும் இராஜதந்திர நெருக்கடி எனும் மழைக்குள் கொழும்பை ஆழ்த்தப் போகின்றன என்பதை இப்போதே உய்த்துணரத் தக்கதாக நிலைமை மாறி வருவது என்னவோ நிஜம்தான்.....!

நன்றி: தமிழ்

0 Responses to சிறீலங்காவின் அடக்குமுறை: சூழ்ந்து வரும் சர்வதேச நெருக்கடி?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com