வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த என்னை தட்டியெழுப்பி கையில் விலங்கிட்ட கனடா நாட்டு காவல்துறையினர் என்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர் என்று கனடாவிலிருந்து நாடு திரும்பிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
கனடா மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசுவதற்காக சென்ற சீமான், அந்நாட்டு குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டார். அவர் இந்தியா வந்திறங்கியபோது, விமான நிலையத்துக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் தமிழர்களின் தேசிய கொடியான புலிக்கொடிகளையும் தேசிய தலைவர் பிரபாகரனின் படங்களையும் தாங்கிய வண்ணம் எழுச்சியுடன் வரவேற்றனர்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சீமான் -
"கனடா அரசு என்னை வேண்டுமென்றே நாடு கடத்தியது. கனடாவில் முன்னரும் நான் எழுச்சிக்கூட்டங்களில் பங்குபற்றி உரையாற்றியிருக்கிறேன். ஆனால், விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில், என்னை பேசவிடாமல் கனடா காவல்துறை தடுத்தது வியப்பாக உள்ளது.
"கனடாவில் எனது நண்பரின் வீட்டில் தூங்கியிருந்தவேளையில், அதிகாலை நேரம் வீட்டுக்குள் நுழைந்த கனடா காவல்துறையினர் மாவீரர் தினத்தில் நீங்கள் பேசக்கூடாது என்று என்னை கேட்டுக்கொண்டனர். எனது கைகளில் விலங்கிட்டு என்னை கைது செய்து சென்றனர். இவ்வளவு தூரம் சென்று உரையாற்றமுடியாமல் போய்விட்டது என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது
"இலங்கையில் முள்வேலி சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவரவர் வாழ்விடங்களுக்கு செல்வதுதான் முக்கியம். - என்று கூறினார்.
0 Responses to அதிகாலை வீட்டிற்குள் நுழைந்து கைகளில் விலங்கிட்டு கைது செய்து நாடுகடத்தினர்: விமான நிலையத்தில் சீமான் (காணொளி இணைப்பு)