உலகத்தமிழர் நாம் அனைவரும் பாரம்பரிய தமிழர் மரபுக்கிணங்க இயற்கையோடு ஒன்றித்து, நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர் நோக்கும் தமிழர் திருநாள் இது.தமிழீழத் தாயகத்தில் சிறீலங்காவின் இராணுவ மேலாதிக்கத்துக்குள்ளாகி வாடுகின்ற எமது அன்பு உறவுகளின் எதிர்காலம் சிறக்க உழைப்போம் என்று திடசங்கற்பம் பூணும் நாளாக இன்றைய தமிழர் திருநாளை நாம் எதிர்கொள்கிறோம்.
கடந்த ஆண்டில் இதே நாட்களில் அனைத்துலக குமூகம் வாளாவிருக்க உலக மனச்சாட்சியையே உலுக்கும் வகையில் ஈழத்தமிழர் தாயகத்தின் நடைமுறை அரசு அழிக்கப்பட்டு, எமது மக்கள் சிறிலங்கா இராணுவத்தின் கொடிய இன அழிப்புப் போரின் மூலம் அடிமை கொள்ளப்பட்டனர்.
நாம் திரண்டெழுந்தோம், ஆர்ப்பரித்தோம், ஆனாலும் எமது தார்மீகக் குரல்களுக்கும் அப்பால் அழிவின் சக்திகள் தீர்க்கமாய்ச் செயலாற்றின.
அதிர்ந்து போனாலும் நாம் அனைவரும் ஆழமாகச் சிந்திக்கவும் செய்தோம்.
இந்த அடிமைத் தளையை நிரந்தரமாகக் களைந்தெறிய வேண்டுமானால் அனைத்துலக ரீதியாக நாம் ஒரு தவிர்க்கப்படமுடியாத, தர்க்கரீதியாக ஓரங்கட்டப்படமுடியாத ஆளுமைமிக்க சக்தியாக எழுந்தாகத்தான் வேண்டும்.
இந்தச் சிந்தனையின் முதற்கட்டமாகப் புலம்பெயர் சூழலில் எமது அரசியல் விருப்பு வெறுப்புகளைச் சனநாயக ரீதியில் இவ் உலகிற்குத் தெளிவாக எடுத்துரைப்பதற்காகக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நோர்வே வாழ் ஈழத்தமிழர்கள் மே 10 ஆம் நாளன்று, தாயகத்தில் இன அழிப்புப் போர் உச்சம் பெற்றிருந்த வேளையில், தொடர்போராட்டங்களின் மத்தியிலும் நடாத்தி முடித்து, எந்தத் தலை நகரில் ஈழத்தமிழரின் உரிமைக்கு ‘உள்ளக சுயநிர்ணயம்’ என்று பூட்டுப் போட விழைந்தார்களோ அந்த தலைநகருக்குரிய நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் தமது தாயக மக்களின் அரசியல் வேணவாவை ஐயந்திரிபற எடுத்தியம்பினர்.
இறைமையும் சுதந்திரமுமுள்ள தமிழீழத் தனியரசே எமது பெருவிருப்பு என்பது மீளுறுதிசெய்யப்பட்டது. ஊத்றுப் எனும் பன்முகப் பண்பாட்டுப் பத்திரிகையின் பங்களிப்பும், வாக்கெடுப்பை நிர்வகிப்பதற்காக இயங்கிய சுயாதீனமான தேர்தற்குழுவில் கடமையாற்றியவர்களின் பங்களிப்பும் இந்த வரலாற்று முன்னெடுப்பில் குறிப்பிடத்தக்கவை.
தாயகத்தில் ஈழப்போர்-4 முடிவுற்று ஆறு மாதங்கள் பூர்த்தியாக முன்னதாக இதே மக்களாணையின் அடிப்படையில் சனநாயக ரீதியாகத் தேர்தல் மூலம் உருவாக்கம்பெற்ற, நாடுதழுவிய ஈழத் தமிழர் அவையாக, எமது அவை கடந்த நவம்பர் 15 அன்று உருவாக்கம் பெற்றது. இதிலே தமிழகத் தமிழர் ஒருவர் தெரிவானதும் இரண்டு நோர்வேஜியர்கள் தெரிவானதும் எமது உறவுப் பாலத்தையும் தார்மீகப் பலத்தையும் சனநாயக ரீதியாக மேலும் பலப்படுத்தின.
கருத்துக் கணிப்பில் மீளுறுதி செய்யப்பட்ட தமிழீழத் தனியரசை நிறுவும் நோக்குடன், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் இராசதந்திர ரீதியிலான ஆளுமை மிக்க சனநாயக வழிப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மக்களவைகளில் முதலாவதென தமிழர் வராலாற்றில் பெருமையுடன் நோர்வே ஈழத்தமிழர் அவை பதிவாகியிருக்கிறது.
இவ் வழியிலேயே பிரான்சில் 2009 டிசம்பர் 12, 13 ஆம் நாட்களிலும், கனடாவில் 2009 டிசம்பர் 20 அன்றும் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. அங்குள்ள மக்களும் தமது பெரு விருப்பாக, சுதந்திரமும் இறைமையும் கூடிய தமிழீழத் தனியரைசை நிறுவுவதற்கான ஆணையைத் தந்துள்ளார்கள்.
தொடரச்சியாக, 2010 சனவரி 23, 24 ஆம் நாட்களில் சுவிசிலும், 24 ஆம் திகதியன்று செருமனி, ஒல்லாந்து ஆகிய நாடுகளிலும், 30, 31 ஆம் நாட்களில் பிரித்தானியாவிலும், இவற்றைத் தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் சுதந்திரமும் இறைமையும் கூடிய தமிழீழத் தனியரைசை நிறுவுவதற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களை மேற்கொள்ள இருக்கின்றார்கள்.
பல்வேறு நாடுகளின் தமிழீழ மக்களாணை, மக்களவைத் தேர்தலுக்கான குழுக்களின் பிரதிநிதிகள் டிசம்பர் மாதம் 26, 27ம் திகதிகளில் செருமனியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாடொன்றில் சந்தித்துக் கலந்துரையாடி தொடர்ச்சியான செயற்பாட்டுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட முதற்கட்டத் தீர்மானங்களை மேற்கொண்டனர்.
அவை வருமாறு:
1) மக்களாணையை மீளுறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு, மக்களவைக்கான யாப்பு, அதற்கான தேர்தல் போன்றவற்றுக்கான மற்றைய நாடுகளின் அனுபவப் பகிர்வை ஒவ்வொரு நாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கும், ஒருங்கிணைத்து வழங்கும் முகமாகவும், செயற்பாட்டின் தரத்தைக் கண்காணிப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்வதற்கு உரிய வகையிலும், ஒரு யாப்பு, தேர்தல் கண்காணிப்புக் குழுவை உருவாக்குதல்.
2) ஒஸ்லோவை மையமாகக் கொண்டு புலம்பெயர் குமூகத்தின் இராசதந்திர ஆற்றலை முன்னேற்றிச் செயற்படும் வகையில் மக்களவைகளை ஒருங்கிணைக்கும் ஒரு மைய நிலையத்தை ஏற்படுத்துவதற்கான பரிசீலனைக்குழு ஒன்றை அமைத்தல்.
3) தாயக சிந்தனையுடன் சமகாலத்தில் உருவாகும் ஏனைய கட்டமைப்புகளுடன், உருவாக்கக் காலத்திலேயே அவற்றுடன் கோட்பாட்டு, கட்டமைப்பு, செயல்முறை ரீதியாக எவ்வாறு ஒவ்வொரு நாட்டின் மக்களவைகளும் மத்தியில் அமைகின்ற மையமும் ஒன்றித்து அல்லது ஒன்றிணைந்து இயங்குவது என்பது குறித்த முடிவுகளை, குறித்த செயற்திட்டத்தில் ஈடுபடுபவர்களோடு கலந்துரையாடி முடிவெடுப்பதற்கான பிரதிநிதிகள் குழு ஒன்றை அமைத்தல்.
4) மேற்குறித்த வேலைத்திட்டங்களின் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதோடு, மக்களாணையை மீளுறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு, மக்களவைத் தேர்தல் ஆகிய இரண்டு நாடு தழுவிய வேலைத்திட்டங்களை விரைந்து செயற்படுத்தி முடிக்கும் காலம் வரையான செயற்பாடுகளுக்கான சர்வதேச இணைப்பாளராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு. சி.பிரதீபன் (+33613556342, noel75@hotmail.fr) அவர்களும், பேச்சாளராக செல்வி கிருசாந்தி சக்திதாசன் (+33634873078, kirushanthi@gmail.com) அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மேற்குறித்த முடிவுகளுக்கமைய பிரித்தானியா, செருமனி, சுவிஸ், ஒல்லாந்து, ஆகிய நாடுகளிலும் மக்களாணை மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனவும், இந் நாடுகளைப் போன்று ஏனைய நாடுகளிலும் இவ் வேலைகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றனவெனவும், திரு பிரதீப் அவர்கள் எமக்குத் தெரிவித்திருப்பது திருப்தியும் நம்பிக்கையும் தருவதாக அமைகிறது.
நோர்வே ஈழத் தமிழர் அவை, தேர்தலைத் தொடர்ந்து, தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களின் நலனுக்கான அதன் செயற்திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. அதேபோன்று பிரான்சில் இயங்கும் தற்காலிக தமிழீழ மக்கள் பேரவைக் கட்டமைப்பும், டென்மார்கில் 10.01.2010 அன்றைய பொதுக் கூட்டத்தில் மக்களாற் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது நிர்வாக உறுப்பினரைக் கொண்ட டென்மார்க் தமிழர் பேரவையும், அவற்றின் முதற்கட்ட வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன. இவர்களைத் தொடர்ந்து கனடாவில் 27.03.2010 அன்று கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் நடாத்தப்பட உள்ளது.
புலம்பெயர் சூழலில் புதுவீச்சுடன் உருவாகிவரும் தமிழர் கட்டமைப்புகளுக்கிடையே உயர்மட்டம், கீழ்மட்டம் என்பதான பாகுபாடுகளுக்கு இடமளிக்காமல், தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களின் நலனுக்காக உழைக்கும் அதே நேரம் தமிழீழத் தனியரசை விரைவில் நிறுவ வேண்டிய அனைத்து வேலைகளையும் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மக்களவைகள் முன்னெடுக்கும் என்பதை எம் மக்களுக்கு அறியத் தருகின்றோம்.
சனநாயகச் சமவுரிமைக் கோட்பாட்டுச் சிந்தனைக்கு மதிப்பளித்து நாம் அனைவரும் செயலாற்றவேண்டும் என்று நாம் உறுதி கொள்வோம்!
''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்''
இவ்வண்ணம்,
வைத்திய கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா
தலைவர்
நோர்வே ஈழத்தமிழர் அவை



0 Responses to எம் சொந்த உயிர்த்துவமே சஞ்சீவியாக எழுந்து பறந்தாக வேண்டும்