
அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ் மக்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுவருகின்றமை அதிகரித்துள்ளது. இதிலும் குறிப்பாக மீள்குடியேற்றம் என்ற பெயரில் கொண்டுசெல்லப்பட்ட மக்களே பெரும்பாலும் இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
அண்மையில் நான்குக்கும் மேற்பட்ட மீள்குடியேற்ற மக்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் கிணறுகளுக்குள் வீசப்பட்ட நிலையில், மீண்டும் வடமராட்சி மற்றும் மாதகல் பகுதிகளில் மூன்றுபேர் படுகொலை செய்யப்பட்டு கிணறுகளுக்குள் உடலம் வீசப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வடமராட்சி குடத்தனை மற்றும் கரணவாய் பகுதியில் கிணற்றில் இருந்து இருசடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாதகல் அந்தோனியார் கோவிலை அண்டிய பகுதியில் உள்ள கிணற்றில் மற்றும் ஒரு உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதில் குடத்தனை பகுதியில் எடுக்கபட்டவர்கள் தெல்லிப்பளை பகுதியினை சேர்ந்த 45 அகவையுடைய முருகேசு செல்வராசா, மற்றும் குடத்தனை மாளிகைத்திடல் முகாம் பகுதியை சேர்ந்த 22 அகவையுடைய விக்னேஸ்வரன் ஆகியோரின் உடலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கோப்பாய் மத்தியினை சேர்ந்த 58 அகவையுடைய அந்தோனிப்பிள்ளை யோசுராச ஆகியோரின் உடலங்கள் இனம்காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் மர்மமான கொலைகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான கொலைகளுக்கு சிறீலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களே காரணம் என்று மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.
0 Responses to மீண்டும் தமிழ் மக்கள் களை எடுப்பு - சிறீலங்காப்படையின் உதவியுடன் ஒட்டுக்குழு