கொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு பலாலி விமானநிலையத்தை வந்தடைந்த பொன்சேகா குழுவினர் அங்கிருந்து நேரடியாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை நடத்தினர். அதன்பின்னர், அங்கிருந்து காரைநகருக்கு சென்ற பொன்சேகா குழுவினர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தி.மகேஸ்வரனின் நினைவிடத்துக்கு மதிப்பளித்துவிட்டு அங்கு பொதுமக்களை சந்தித்து பேசினர்.
காரைநகர் சிவன் கோவில் மற்றும் மணற்காடு முத்துமாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கும் சென்ற பொன்சேகா குழுவினர் அங்கு வழிபாடுகளை நடத்திவிட்டு அப்பிரதேச மக்களை சந்தித்து பேசினார்கள்.
அதன்பின்னர், யாழ் பல்கலைக்கழகத்துக்கு சென்ற குழுவினர் அங்கு துணைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.
அதனைஅடுத்து, யாழ் மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய பொன்சேகா குழுவினர் அங்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் அமைப்பு பிரதிநிதிகளுடனும் பேசினர்.
யாழ் மாவட்ட வர்த்தகர்கள் சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்திய பொன்சேகா, மானிப்பாய் வீதியில் பொன்சேகாவுக்கான தேர்தல் பிரசார அலுவலகத்தையும் திறந்துவைத்தார்.
பொன்சேகாவின் இந்த விஜயத்தின்போது அவருடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜயலத் ஜெயவர்த்தன, அனுரகுமார திசநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.







0 Responses to பொன்சேகா நல்லூர் கந்தசுவாமி வழிபாட்டுடன் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார்! (படங்கள் இணைப்பு)