எமது மக்க ளுக்கு அற்ப சொற்ப சலுகை களை வழங்கி அவர் களை எவராலும் விலைக்கு வாங்கிவிட முடியாது. அவர்கள் உரிய வேளையில், சரியானதகுந்த திட மான பதிலை அளிப்பார்கள்.அதே சமயம் நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதி ஆட்சி முறை யைத் தமிழ் மக்கள் ஏற்கத்தயாரில்லை. அதனை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் மூலம் நாம் தெளிவாக எடுத்துரைத்தோம். இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலமும் அனை மீண்டுமொரு தடவை வெளிப்படுத்துவோம்.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவரும் திரு கோணமலை மாவட்ட கூட்டமைப்பின் தலைமை வேட்பாளருமான இரா.சம்பந்தன்.
சுழிபுரம் வழக்கம்பரை அம்மன் ஆலய முன்றலில் நேற்று மாலை நடைபெற்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
வடக்குகிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சித் தீர்வே அவசியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளது.
கூட்டமைப்பை சிதைக்க பல முனைகளில் முயற்சி
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை அசைக்கவோஉடைக்கவோ முடியாது. அது பலம் வாய்ந்த சக்திஅமைப்பு. அதனை சிதைப்பதற்குப் பலர் இப்போது பல முனைகளில் இருந்தும் முயன்றுகொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சிகள் அனைத்தும் ஏப்ரல் 8ஆம் திகதி தவிடு பொடியாகிவிடும். அதனைச் செய்வதற்கு எமது மக்கள் இப்போது தயாராகிவிட்டார்கள்.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பெரும் சவாலை யாழ்.மக்கள் எதிர்கொண்டுள்ளனர். நாம் ஒரு தனித் தேசிய இனம். எமக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. நாங்கள் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். எமது மக்களுக்கு அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி அவர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். எமது மக்கள் அடிப்படை உரிமைகளை மறந்துவிடுவார்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள். ஆளும் கட்சிக்கு இந்த எண்ணம் இருக்கிறது. இதற்கு எமது மக்கள் பதிலளிக்க வேண்டும். அது உறுதியான திடமான பதிலாக இருக்க வேண்டும். உரிய வேளையில் அவர்கள் தகுந்த பதிலை அளிப்பார்கள்.
நாம் சிங்களப் பெரும்பான்மை மக்களை நேசிக்கின்றோம். நீங்களும் சிறப்பாக வாழவேண்டும். அதே நேரம் எங்களையும் வாழ விடுங்கள். உரிமையைத்தவிர நாம் வேறெதையும் கேட்கவில்லை. இந்த நாட்டின் சகல உரிமைகளையும் அனுபவிக்க எமக்கும் உரித்துண்டு.
அரச சேவையில் தமிழர்கள் மூன்றரை வீதத்தினரே! இளைஞர்களே!, யுவதிகளே! உங்களின் பிரச்சினைகளை நாங்கள் உணராமல் இல்லை. அவற்றை நாம் உதாசீனம் செய்ய முடியாது. ஆனால் அவை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும். இன்று அரச சேவையில் தமிழர்களின் விகிதாசாரம் மூன்றரை வீதம் முதல் நான்கு வீதமாக உள்ளது. அது முன்னர் 25வீதமாக இருந்தது. அது இவ்வாறு குறைந்ததற்கு காரணம் என்ன?
அபிவிருத்தி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இங்கு அபிவிருத்தி நடைபெறவில்லை. அபிவிருத்திக்கான பணமும் அரசினுடையது இல்லை. அது சர்வதேச நாடுகள் வழங்குகின்ற உதவிகள். அதில் பெரும் பகுதி எமது மக்களுக்கு கிடைப்பதில்லை. அதை வேறு பலர் அபகரித்துக் கொள்கிறார்கள்.
அபிவிருத்தி என்பது எமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நாம் தீர்மானிக்க வேண்டியது. அது எமது மக்களின் இறைமையில் ஓர் அங்கம். அது எமக்குத் தேவை என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அதை இந்தத் தேர்தல் மூலம் நாம் நிரூபிப்போம்.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே இப்போது ஒரு ஆழமான உறவு ஏற்பட்டு வருகின்றது. ஒருவருக்கு ஒருவர் தேவை என்பதை அவர்கள் (முஸ்லிம் மக்கள்) உணர்ந்துள்ளார்கள். இந்தத் தேர்தலில் அந்த முடிவு திடமாக உறுதிப்படுத்தப்படும். எனவே எமது மக்கள் யாழ்.மாவட்டத்திலிருந்து கூட்டமைப்பின் சார்பில் 9பேரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் வேட்பாளர்களான சி.ஸ்ரீதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி, க.அருந்தவபாலன், ஈ.சரவணபவன், மாவை.சேனாதிராசா, சீ.வி.கே.சிவஞானம், எஸ்.இராஜேந்திரன், பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், மு.றெமிடியஸ், எஸ்.குலநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.



0 Responses to தமிழர்களை எவரும் விலைக்கு வாங்கிவிட முடியாது: சம்பந்தன்