கடந்த வருடம் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்குமிடையே போர் உக்கிரமாக நடைபெற்றபோது, அங்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பாக உலகத்தின் கவனத்தை ஈர்த்த வைத்தியர் ஒருவர் தமிழ் மக்களுக்கு எதிராக போரை முன்னெடுத்த அரசதலைவரை ஆதரிக்கும் கட்சி ஒன்றின் சார்பாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.இறுதியாக இராணுவம் வெற்றி பெற்றதையடுத்து சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் விடுதலைப்புலிகளின் தவறான தகவல்களை வழங்கியதென்ற குற்றச் சாட்டில் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா(40) மேலும் 4 வைத்தியர்களுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
தற்போது விடுதலைப்புலிகளுக்கு எதிராக தனது இராணுவ நடவடிக்கைக்குக் கட்டளையிட்ட சனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் தமிழ் கட்சி ஒன்றின் சார்பில் அவர் வியாழனன்று நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
'நாட்டின் தலைமைப் பொறுப்பிற்கும் போரிற்குப் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் பொருத்தமான தலைவர் சனாதிபதி மகிந்த ராஜபக்சதான் என நான் நம்புகிறேன்', என்கிறார் சண்முகராஜா.
வன்னிக் காடுகளில் எஞ்சியிருந்த புலிகளுடன் இடம்பெற்ற போரின்போது இறுதி 4 மாதங்களிலும் 7000 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
மூன்று தசாப்தங்களிற்கு மேலாக இடம்பெற்ற யுத்தம் மே 18 இல் முடிவுக்கு வரும்வரை போர் வலயத்தினுள்ளேயே நின்ற வைத்தியர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.
இறுதி மாதத்தில் மட்டும் 350 - 400 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அதுபோலவே சனவரி முதல் ஏப்ரல் வரையான மாதங்களிலும் இடம்பெற்றதாகவும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.
இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சண்முகராஜாவும் ஏனைய வைத்தியர்களும் தாம் புலிகளின் அழுத்தத்தினாலே அவ்வாறு தகவல்களை வழங்கியதாக கூறி தமது தகவல்களை மறுதலித்தனர்.
பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களது வேலைகளும் மீண்டும் வழங்கப்பட்டது.
'இழப்பு விபரங்கள் தொடர்பாக நான் இப்போது கதைக்க விரும்பவில்லை. அது எல்லாம் முடிந்துவிட்டது', என்று முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டிலிருந்து சண்முகராஜா AFP யிற்கு தெரிவித்தார்.
'அந்த இறுதி நாட்களில் மின்சாரமோ, தேவையான மருத்துவ வசதிகளோ, உபகரண வசதிகளோ இன்றி நாம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பணியாற்றினோம்', என்றார்.
'எறிகணைகளிலும் குண்டுகளிலும் இருந்து தப்புவதற்காக நாம் வைத்தியசாலையை நகர்த்தவேண்டியிருந்தது. எமது மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். ஆனால் போர் முடிவடைந்து தற்போது நிலமைகள் ஓரளவுக்கு வழமைக்கு திரும்பியுள்ளன'.
போர் இடம்பெற்ற காலத்தில் நூற்றுக் கணக்கானோருக்கு களமுனை சத்திரசிகிச்சையினை மேற்கொண்ட சண்முகராஜா, தனது அரச பணியை கைவிட்டு ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் ஈரோஸ் அமைப்பின் சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறார்..
தேர்தல் திணைக்களத்தின் தகவல்களின்படி, சண்முகராஜா போட்டியிடுகின்ற முல்லைத்தீவு மாட்டம் உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்தில் 267000 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் போர் முடிவடைந்து ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு பின்னரும் இந்த வாக்காளர்களுள் பெரும்பாலானோர் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பதால், உண்மையில் வாக்காளர்களில் அரைவாசியினரே வாக்களிப்பார்களென நம்பப்படுகிறது.
'எனது மக்கள், நான் சிகிச்சையளித்த நோயாளிகள் என்னைப் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்பதை நான் நம்புகிறேன.', என்கிறார் சண்முகராஜா.
முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் அவர்களும் இதேபோல போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கு சில நாட்களிற்கு முன்னர் விடுவிக்கப்பட்ட இவர்; சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார்.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் மறைமுக அழுத்தத்தின் காரணமாகவே வைத்தியர் சண்முகராஜாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினமும் அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் கட்சிகளின் சார்பாக போட்டியிடுவதாக மக்கள் கருதுகின்றனர்.



0 Responses to போர்க்களத்தில் இறுதிவரை நின்றிருந்த வைத்தியரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தவுக்காக போட்டி!