அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வன்னியை வசிப்பிடமாக கொண்ட உதயகுமாரி (39) கணவரையும், மகனையும் 2009 ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற போரில் இழந்துள்ளார். அது மட்டுமல்லாது கடந்த வருடத்தில் இருந்து காணாமல்போன அவரின் 16 வயதான மகளையும் அவர் தேடி வருகின்றார்.
அவரின் மகள் 2007 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடி வந்திருந்தார். மகளுக்காக உதயகுமாரியின் குடும்பம் வன்னியிலேயே தங்கியிருந்தது.
சிறீலங்காவில் உள்ள மக்கள் புதுவருடத்தை கொண்டாடி வருகின்றனர். எனக்கு ஒவ்வொரு மணித்துளியும் கண்ணீருடன் தான் கரைகின்றது. எனது கணவரும், எனது மகனும் கொல்லப்பட்டு விட்டனர். எனது மகள் எங்கு இருக்கிறார் என தற்போதுவரை தேடியவண்ணம் உள்ளேன் என உதயகுமாரி கண்களில் கண்ணீர் வழிய தனது கதையை கூற ஆரம்பித்தார்.
வீட்டுக்கு ஒருவர் என்ற திட்டத்தின் அடிப்படையில் எனது மகளும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டார். கிளிநொச்சியில் நகரப்பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட அவர், அதிக காலத்தை களமுனைப் பகுதியில் தான் செலவிட்டிருந்தார்.
எனது மகள் அழகானவர், அவர் எந்த வன்முறைகளிலும் ஈடுபடாதவர். அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததால் அந்த பிரதேசத்தை விட்டு வெளியேற நாம் விரும்பவில்லை.
விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவுக்கு நகர்ந்தபோது நாமும் அங்கு சென்றோம். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் அங்கிருந்து வெளியேற நாம் திட்டமிட்டோம். அங்கு பொதுமக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் மீது அதிகளவு எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் எம்மால் தொடர்ந்து அங்கு தங்கயிருக்க முடியவில்லை.
முல்லைத்தீவில் இருந்து அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு நாம் சென்ற சமயம் எறிகணை ஒன்று எனது கணவருக்கும் மகனுக்கும் நடுவில் வீழ்ந்து வெடித்தது. அவர்கள் இருவரும் எனது கண் முன்னால் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். எனது கணவரின் உடலின் சிதறல்களையே நான் கண்டேன். நான் அவர்களுக்கு மிக அண்மையாக இருந்தேன்.
அன்றே நானும் உணர்வுகளால் இறந்துவிட்டேன். தற்போது ஒரு நடைப்பிணமாக வாழ்கிறேன். கடந்த வருடம் நான் ஆழமாக நேசித்த உறவுகளை இழந்துள்ளேன். எனவே என்னால் எவ்வாறு புதுவருடத்தை கொண்டாட முடியும். எனக்கு எதுவும் புதியன அல்ல.
எனது மகளை கண்டுபிடித்து தருமாறு அதிகாரிகளை நான் கேட்டுள்ளேன். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுசெய்து எனது மகளை கண்டறிய உதவுங்கள். விடுதலைப்புலிகளில் இணைந்தவர்களில் பலர் புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர், பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் பட்டியலில் எனது மகள் இல்லை.
எனது மகளை காணும் வரை எனக்கு புதுவருடம் இல்லை. ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை நான் அறியேன் என தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழம் இ நியூஸ்
0 Responses to உறவுகளை இழந்துள்ள நாம் எவ்வாறு புதுவருடத்தை கொண்டாடுவது: வன்னியில் இருந்து ஒரு மடல்