ஜெயலலிதா ஆட்சியில் பாலசிங்கத்திற்கு சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று குரல் கொடுத்த கருணாநிதி, இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளபொழுது பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி மறுப்பது ஏன்? என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:
''தமிழகத்தில் சிகிச்சை பெற வந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை சென்னை விமான நிலையத்திலிருந்தே மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மனிதர்களுக்கு அவர்கள் குற்றவாளியாக இருந்தால் கூட ஏன்? தூக்கு தண்டனை கைதியாக இருந்தால் கூட உணவும், மருந்தும் மறுக்கப்படகூடாது என்பது மனி உரிமைகளுக்கான ஐ.நா அமைப்பின் சர்வதேச பிரகடனம் ஆகும். பிரபாகரனது தாயாரை பொருத்தமட்டிலும் அவர் ஈழத்தில் நடந்த அனைத்துவித போர் நடவடிக்கைகளிலும் முறையாக விலகி நின்றவர். தமிழர்களுக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரத்தை தேடித் தந்த ஒரு மாவீரனுடைய தாயார் என்பதை தவிர அவர் எந்தவித குற்றமும் புரியாதவர்.
சமீபத்தில் தனது கணவனையும் இழந்து பல்வேறு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானவர். வாய்கிழிய பெண்ணுரிமை பேச கூடியவர்கள் ஊனமுற்றோரையும் கூட மாற்று திறந்த கொண்டோர் என்று அழகுபட வர்ணிப்பவர்கள் 80 வயது நிரம்பிய ஒரு மூதாட்டிக்கு இந்த தமிழ்மண்ணில் சிகிச்சை பெறும் உரிமையை மறுத்தது ஏன்?
வானாளாவிய அரசியல் அதிகாரத்தை கொண்டிருக்ககூடிய முதல்வர் பிரபாகரன் தாயார் என்பதற்காக அல்ல சாதாரணமான ஒரு பெண் மீது காட்ட வேண்டிய இரக்கத்தை கூடக் காட்ட தவறியது ஏன்? ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது ஒருமுறை தமிழகத்தில் சிகிச்சைபெற பாலசிங்கம் வேண்டுகோள் விடுத்தார். அன்று அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்தபொழுது பாலசிங்கம் சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று குரல் கொடுத்தார். அவரே இன்று அதே அதிகாரத்தில் உள்ளபொழுது பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி மறுப்பது ஏன்? தமிழை சொல்லியும், தமிழ் இனத்தின் பெயராலும் ஆட்சி நடத்த கூடியவர்கள் வீர தமிழ் தாய்க்கு மருத்துவ ரீதியான உதவிகளை தடுப்பதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை.
பிரபாகரனின் தாயார் நாடு கடத்தப்பட்டவரோ அல்லது சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியோ அல்ல. அவர் புறநானூற்றில் இடம் பெற்ற எடுத்துகாட்டான வீரத் தாய். எனவே தமிழக முதல்வர் பிரபாகரனின் தாயாருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்'' என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.



0 Responses to தேசியத்தலைவரின் தாயாருக்கு அனுமதி மறுப்பது ஏன்? கிருஷ்ணசாமி