சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித பொகொல்லாகம ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய அரசில் பதவியொன்றை பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், மீண்டும் பதவிக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் கீழான அதிகாரம் வாய்ந்த பதவி ஒன்றையோ அல்லது பிரதி அமைச்சுப் பதவி ஒன்றையோ பெற்றுக் கொள்வது தொடர்பாக அவர் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 8ஆம் திகதி நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரோஹித பொகொல்லாகம நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வகையில் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளத் தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கான பெயர் விபரங்களை பட்டியல்படுத்தி தயாரித்துள்ளதகாவும், விரைவில் இது குறித்த உத்தியோகப்பற்றற்ற ரீதியில் கூட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரையில் அமைச்சுப் பொறுப்புக்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சிறிலங்காவின் புதிய அமைச்சர்கள் குறித்த வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடப்படும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பினை பெற்றுக் கொள்வதற்கு பல முன்னணி அமைச்சர்கள் கூடுதல் நாட்டம் காட்டி வருவதாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிறிலங்காவின் அமைச்சரவை நியமனம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



0 Responses to புதிய அரசில் ஏதாவது ஒரு பதவியைப் பெற பொகொல்லாகம தீவிர முனைப்பு