Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் வான் படையணியைச் சேர்ந்த படையினன் ஒருவரால் முன்னரங்க நிலைகளில் எடுக்கப்பட்ட 200 இற்கும் அதிகமான புகைப்படங்களை தான் பரிசீலித்துள்ளதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்ததாக .எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

சாட்சிகளைக் கொண்டதாகக் காணப்படும் புகைப்படங்களில் விடுதலைப்புலிகளின் அரசியல் பணியாளர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்டிருந்ததையும் பின்னர் தலையில் காயத்துடன் இறந்து காணப்பட்டதையும் காண்பிப்பதாக அமைந்துள்ளது.

"சிறையிலிருக்கும்போது நீதி விசாரணையின் பிரகாரம் அந்த மனிதருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது என்ற தீர்மானத்திற்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வர முடியாது.

முழுமையான விசாரணை தேவையென்பதை கிடைத்துள்ள ஆதாரம் சுட்டிநிற்கிறது" என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இலங்கை அரச படைகளும் விடுதலைப்புலிகளும் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க்கால துஷ்பிரயோகங்கள் தொடர்பான புதிய ஆதாரம் தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணை தேவைப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களின் சாட்சியங்கள் தொடர்பான பதிவுகளையும் புகைப்பட ஆதாரத்தையும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு சேகரித்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

2009 மே 23 இல் போர்ச் சட்ட விதிகள் மீறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்துமென .நா. செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார்.

ஒரு வருடம் கழிந்தும் அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்குத் தேவையான அர்த்தபுஷ்டியுடனான நடவடிக்கைகளை அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லையென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

கடந்த வாரம் அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை அமைத்திருந்தது. 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் தோல்வியடைந்ததை பரிசீலிப்பதற்கும் அதன் பின்னரான நிகழ்வுகளை பரிசீலிப்பதற்குமான அதிகாரம் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் ஆவணப்படுத்தப்பட்டவை போன்ற போர் விதிமீறல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான அதிகாரத்தை இந்த ஆணைக்குழு கொண்டிருக்கவில்லை.

போர்க் குற்றங்கள் தொடர்பான அதிக எண்ணிக்கையான,நம்பகரமான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதற்கு போதிய அளவினதாக இல்லாத மற்றொரு ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பதில் பணிப்பாளர் எலெய்ன் பியஸன் கூறியுள்ளார்.

துஷ்பிரயோகங்கள் தொடர்பான புதிய ஆதாரமானது இலங்கையானது இவற்றை மூடிமறைப்பதற்கு .நா. அனுமதிக்கக்கூடாது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மோதலில் சம்பந்தப்பட்ட இருதரப்பினராலும் போர்க் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சர்வதேச விசாரணையொன்றை ஏற்படுத்துமாறு .நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

"பான் கீ மூனின் செயற்பாடில்லாத தன்மையானது துஷ்பிரயோகங்களை மேற்கொள்வோர் இலகுவான முறையில் அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் தொடர்பாக அறிவிப்பதற்கும் உண்மையான, நீதிக்காக மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளையும் தடுப்பதற்கு உரத்து குரலெழுப்புவதற்குமான சமிக்ஞையை விடுக்கின்றது" என்று தெரிவித்திருக்கும் பியஸன், இலங்கையில் பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான ஒரேவழி சுயாதீன சர்வதேச விசாரணையை ஏற்படுத்துவது மட்டுமே என்று கூறியுள்ளார்.

0 Responses to இன்னும் 200 புகைப்படங்கள் உள்ளன! எச்சரிக்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com