Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கம் தமிழ் மக்களை மட்டுமல்லாது இந் நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அதேநேரம் சர்வதேச சமூகத்தினரையும் ஏமாற்றி விட்டமை இப்போது தெட்டத் தெளிவாகியுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வன்னிப் பயணங்களின் பின்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வன்னிக்கான முதற்கட்ட பயண நடவடிக்கைகள் நேற்று நிறைவடைந்துள்ளன.

நேற்று கிளிநொச்சிக்கான பயணத்தினை மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் திருவையாறு, தருமபுரம், கண்டாவளை, புளியம்பொற்கணை, கிளிநொச்சியின் அயற்கிராமங்கள் உட்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு மீள் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்ததாக கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய பயணம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,

இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் எந்தவகையான கஷ்டங்களை அனுபவித்தனரோ அதேயளவு கஷ்டங்களைத் தான் மீள் குடியேற்றப்பட்டதன் பின்னரும் அனுபவித்து வருகின்றனர்.

ஏனெனில் அரசாங்கம் கூறுவதைப் போல் எமது மக்கள் மீள் குடியமர்த்தப்படவில்லை. அவர்கள் முகாம்களில் இருந்து வேறு முகாம்களுக்கு மாற்றப்பட்டே உள்ளனர்.

கூடாரங்கள் அமைத்தும், பாடசாலை மண்டபங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள் எந்தவிதமான சுகத்தையும் அனுபவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

நின்மதியாக படுத்துறங்குவதற்கான இடமில்லை. அடிப்படை வசதிகள் என்னும் போது அது அடிமட்டத்தில் காணப்படுகின்றது.

நிவாரண நிதி என்ற பெயரில் வழங்கப்படுகின்ற 25ஆயிரம் ரூபா என்ற பணத் தொகை சிலருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதேவேளை, அநேகமானோருக்கு 5000 ரூபாவே வழங்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு கூரைகளை அமைப்பதற்கென 5 தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந் நிலையில் அவர்கள் விட்டுச் சென்ற வீடுகளும், உடைமைகளும் அடையாளம் காணப்பட முடியாதவாறு காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் மிக மோசமாக காணப்படுகின்றன.

அவர்கள் தமக்கு உதவிகள் செய்யாவிட்டாலும் பரவாய் இல்லை, சொந்த இடங்களில் கொண்டு போய் தம்மை சேர்க்குமாறு வேண்டுகின்றனர். அந்தக் காட்சிகள் பெரும் கவலைக்குரியவை.

தாம் அடுத்தவரிடம் கையேந்தி நிற்க வேண்டிய தேவையில்லை என்று தெரிவிக்கும் அவர்கள் தமக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து சொல்லொணாத் துயரடைந்தவர்களாக இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

அரசாங்கம் உண்மையில் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது. தமிழ் மக்களை மட்டுமல்லாது இந் நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அதேநேரம் சர்வதேச சமூகத்தினரையும் ஏமாற்றி விட்டமை இப்போது தெட்டத் தெளிவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

0 Responses to அரசாங்கம் அனைவரையும் ஏமாற்றிவிட்டது - வன்னிப் பயணத்தின் பின்னர் கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com