Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யூன் 20ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறவுள்ள கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலில் கனடியத் தமிழ் மக்கள் கனடா தழுவி 37 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கனடியத் தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் ரோரன்ரோ பெரும்பாகத்தில் மட்டும் 29 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொன்றியலில் 3 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரொறன்ரோ பெரும்பாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிக்க செல்லும் மக்கள், தமது முகவரியின் போஸ்டல் கோட் அடிப்படையில் அமைந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு. அதாவது 1994 யூன் 20ஆம் நாளும் அதற்கு முன்னர் பிறந்த அனைவரும் வாக்களிக்கலாம். வாக்களிக்க வருபவர்கள் ஒரு புகைப்பட மற்றும் வதிவிட முகவரியை உறுதிப்படுத்தும் அடையாள ஆவணத்தைக் காண்பித்து வாக்களிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாக்களிப்பின் மூலம் மக்கள் 9 தேசியப்பட்டியல் உறுப்பினர்களையும், 13 மாகாணப்பட்டியல் உறுப்பினர்களையும் தெரிவு செய்யவுள்ளனர். இதில் 5 ஆசனங்கள், முறையே பெண்கள், இளையோருக்கென ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நான்கு பிராந்திய உறுப்பினர்களைக் கொண்ட சபைகளும் அமைகின்றன. இதில் ரொறன்ரோ கிழக்கு பிராந்திய சபைக்கான உறுப்பினர்களையும் மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வர்.

மேலதிக விபரங்களை தேர்தல் ஆணையகத்தின் www.tamilelections.ca என்ற இணையத்தளத்திலும், என்ற தொலைபேசி இலக்கத்தில் அழைத்தும் பெற்றுக் கொள்ளலாம்.

கனடியத் தமிழர் தேசிய அவை – கனடியத் தமிழர்களின் காப்பரண்

கனடியத் தமிழருக்கு ஒரு அமைப்பு!

தமிழர் அமைப்புக்களை இணைக்கும் அமைப்பு!

நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் அமைப்பு!

இளையோர், பெண்களை முதன்மைப்படுத்தும் அமைப்பு!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு!

16 வயதிற்கு மேற்பட்டவாகளுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு!

சனநாயக விழுமியங்களுக்கமைய கட்டியமைக்கப்படும் மக்கள் மயப்படுத்தப்பட்ட மக்கள் அமைப்பு!

கனடியத் தமிழர் தேசிய அவை. கனடியத் தமிழ் மக்களிடையே இன்று எங்கும் பேசப்படும் விடயம். ஏன் எமக்கு ஒரு புதிய அமைப்பு வேண்டும்? இதன் வடிவமைப்பு என்ன? இதற்கும் நாடு கடந்த அரசிற்கும் என்ன வித்தியாசம்? தேர்தல்கள் வைப்பதால் பணவிரயம் அல்லவா? போன்ற சில விடயங்களுக்கு சில மக்கள் இன்னும் விடை தேடுகின்றனர்.

இம்முயற்சியின் ஆரம்பம் எப்போது அமைந்தது? கடந்த வருடம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மக்கள் மீள்வாக்குக்கணிப்பு முயற்சி ஆரம்பமானபோதே இவ்விடயம் பேசப்பட்டது. அதாவது வட்டுக்கோட்டைத் தீர்மான மீள்வாக்குக்கணிப்பிற்கு மக்கள் பெரும் ஆதரவை வெளிப்படுத்தினால் அதனை முன்னகர்த்தும் கட்டமைப்புக்களாக ஒரு பலமான நாட்டுக்குள் அமையும் தேசிய கட்டமைப்பும், நாட்டுக்கு வெளியே அமையும் பலமான சர்வதேச கட்டமைப்பு ஒன்றின் தேவையும் வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச கட்டமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசு தன்னை சனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. அதேவேளை கனடாவை பொறுத்தவரை ஒரு பலமான தேசிய கட்டமைப்பின் உருவாக்கம் தள்ளியே சென்றுள்ளது.

ஏற்கனவே பல தமிழர் அமைப்புக்கள் அமைந்தாலும், புலம்பெயர்ந்த தமிழர்களே முதன்மை இயங்கு சக்தியாக மாறியுள்ள இன்றைய சூழலில், அனைத்து கனடிய தமிழர் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கான வலுவையும், வழிகாட்டுதலையும் வழங்கி, அதேவேளை சனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினூடாக முதன்மை தமிழர் அமைப்பு என்ற உறுதியான ஏற்புடைமை நிலைப்பாட்டில் இருந்து, மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக ஒரு அமைப்பை எவ்வாறு கட்டியமைப்பது? இதுவே கனடியத் தமிழ் மக்கள் முன் விரிந்த சவால் நிலை.

இது குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே மக்களுடன் நேரடியாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஒரு யாப்பு உருவாக்கப்பட்டு அதன் முதல் வரைவு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கடந்த கால படிப்பினைகளில் இருந்து எவ்வாறு ஒரு தேர்ந்த அமைப்பை உருவாக்குவது? அதற்கான பதில்களைத் தாங்கியே முதல் வரைவு மக்களின் மேலதிக கரிசனைகளை தன்னுள் வாங்கியது.

20க்கு மேற்பட்ட மக்கள் கருத்தாடல்களில் மக்கள் முன்வைத்த ஆக்கபூர்வமான கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. அதேவேளை வானலை, தொலைக்காட்சிகள் ஊடாக மக்கள் கருத்துக்கள் திரட்டப்பட்டன. இதன் அடிப்படையிலேயே கனடிய தமிழர் தேசிய அவைக்கான வடிவம் முழுமை பெற்றது.

தேசிய அவை மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக அமைய வேண்டும். கனடா தழுவி வாழுகின்ற மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும். தவறிழைக்கின்ற, மக்கள் விருப்பில் இருந்து விலகிச் செல்கின்ற தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மீளப்பெற ஆவன செய்யவேண்டும் என்ற மக்கள் விருப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பாக அமைய தேசியப் பட்டியல், மாகாணப்பட்டியல், பிராந்தியப்பட்டியல் என தெரிவுகள் வகைப்படுத்தப்பட்டன. கனடா தழுவி வாழுகின்ற மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த மாகாணப்பட்டியல் மூலம் மக்கள் தொகைக்கமைய பிரதிநிதிகள் தெரிவு உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் பெண்கள், இளையோரை முதன்மைப்படுத்திய ஒரு வரலாற்று மாற்றத்தை வெளிப்படுத்திய தமிழினம் இன்றைய வரலாற்றுச் சவாலில் அதில் இருந்து பின்வாங்காது தொடர்ந்தும் விட்ட இடத்தில் இருந்து முன்னகரும் வகையில் பெண்கள், இளையோருக்கென 20 சதவீத ஆவணங்கள் தேசிய அவையில் ஒதுக்கப்பட்டன.

0 Responses to 37 வாக்களிப்பு நிலையங்களில் கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com