வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களின் வாக்குரிமை மீண்டும் பறிக்கப்படும் அபாயம் இருப்பதாக, நீதி, நியாயமான தேர்தலுக்கான பரப்புரை அமைப்பு (CaFFE) எச்சரிக்கை செய்துள்ளது.நடைபெற்று முடிந்த இரண்டு தேர்தல்களிலும் வாக்களிக்க தகுதியுடையோரின் வாக்காளர் பட்டியல் முறையாகத் தயாரிக்கப்படவில்லை எனவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட வாக்களர்களின் அடையாள அட்டை இலக்கம் இன்றியே வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டதால் முறைகேடுகள் இலகுவாக நடந்தேறின எனவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வாறான நிலையில் தற்பொழுது வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் விபரங்களை தேர்தல் திணைக்களம் திரட்டி வருகின்ற போதிலும், அந்த நடவடிக்கை முறையாக இடம்பெறவில்லை எனவும், வாக்களிக்க தகுதியுள்ள பலர் இதுவரை ஆரம்ப விண்ணப்ப படிவத்தைப் பெறவில்லை என்றும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
விண்ணப்ப முடிவு திகதிக்கு முன்னர் முகாம்களிலுள்ள மக்கள் மீளக் குடியேற்ற வாய்ப்பில்லை என்ற நிலை காணப்படுகின்ற போதிலும், முகாம்களில் வாக்காளர் விபரம் கோரப்படவில்லை எனவும், மீளக் குடியேறியுள்ள மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மக்கள்கூட வாக்காளர் பட்டியலில் பெருமளவில் இடம்பெறவில்லை என்பதால், இந்த மக்கள் தமது வாக்களிக்கும் அடிப்படை உரிமையை இழக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
மடு, மாந்தை மேற்கு, முல்லைத்தீவு, மல்லாவி, பரந்தன், வவுனியா வடக்கு போன்ற பகுதிகளில் மீளக்குடியேறியுள்ள மக்கள் வாக்காளர் விண்ணப்பப்படிவத்தை இதுவரை பெறவில்லை என்றும் நீதி, நியாயமான தேர்தலுக்கான பரப்புரை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.



0 Responses to வடக்கு மக்களின் வாக்குரிமை மீண்டும் பறிக்கப்படும் அபாயம்: கபே