Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் 6 பேர் சாகும்வரை உண்ணா நோன்பு போராட்டத்தை கடந்த 8 நாட்களாக நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மதுரை வழக்கறிஞர்கள் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உண்ணாநோன்புப் போரில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களில் சிலரின் உடல் நிலை சீர்கெட்டு இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் இந்தப் போராட்டத்தின் நியாயத்தைத் தமிழக அரசு கொஞ்சமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இது தொடர்பாக மத்திய அரசு எத்தகைய முடிவும் எடுக்காமல் இத்தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. தமிழக அரசும் ஒப்புக்காக இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பிவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது.

ஆனால் தமிழகத்திற்குச் சட்டமன்ற மேலவை அமைக்கப்படவேண்டும் என்றத் தீர்மானத்தை சில மாதங்களுக்கு முன்னால் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய கையோடு முதலமைச்சர் தில்லிக்குச் சென்று அதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறார்.

அதில் காட்டிய வேகத்தை ஏன் இந்த பிரச்சினையில் காட்டாமல் நான்காண்டு காலமாகக் கடத்திக்கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு மட்டும் புரிந்த இரகசியமாகும். மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்கும் போது அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதான் மதுரை வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

உடனடியாக முதலமைச்சரோ அல்லது சட்ட அமைச்சரோ டில்லிக்குச் சென்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனே பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் வழக்கறிஞர்களின் போராட்டம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் கூடிய மக்கள் போராட்டமாக மாறும் என எச்சரிக்கிறேன்.

பழ.நெடுமாறன்

(அமைப்பாளர்)

0 Responses to மதுரை வழக்கறிஞர்கள் போராட்டம்: தமிழக அரசின் போக்கிற்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com