Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்ட யப்பான் இப்போது உலக நாடுகளுக்குத் தொழில்நுட்பத் தாயாக நிமிர்ந்து நிற்கின்றது. இதுபோல ஒரு காலத்தில் உலகில் நொந்து கெட்டுப் போனவர்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.

எனவே காலம் என்பது ஓர் இனத்திற்கோ மொழிக்கோ, உரியதல்ல. அது எல்லோர் பக்கமும் வீசக்கூடியது. அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் எங்கள் எதிர்கால ஆரோக்கியம் தங்கியுள்ளது.

அதேநேரம் எங்கள் வாழ்வுக்காகவும் உயர்வுக்காகவும் நாங்கள் அதிகம் பாடுபட வேண்டியவர்களாக இருக்கின்றோம். இழந்தவற்றை நினைந்து நாமே நம்மை இழந்து போவதும், சோகத்தில் துவண்டு போவதும் எங்கள் வாழ்வுக்கு குந்தகம் விழைவிக்க எண்ணுவோருக்கு துணைசெய்வதாகவே அமையும்.

எனவே நாங்கள் வாழவேண்டும். எங்களை வீழ்த்தி இன்பங்கண்ட நாடுகளுக்கு எங்கள் முன்னேற்றம் பாடமாகவும் படிப்பினையாகவும் இருக்கவேண்டும். நாங்கள் கல்வியின் புதல்வர்கள். எங்களிடம் எல்லாத் திறன்களும் உள்ளன. தியாகமும் உண்டு. எங்கோ ஒரு பலவீனம். அந்தப் பலவீனத்தை உடைத்து விட்டால் எங்களிடம் பலர் மண்டியிடுவர்.

அறிவாலும் அர்ப்பணிப்பாலும் எழுந்து நிற்க வேண்டிய அவசியத்தைதேவையை இறைவன் நமக்கு உணர்த்தியுள்ளான். இருந்தும் எங்களில் பலர் எதுவும் உணராத வர்களாக வாழப்பழகிக் கொண்டோம். இனமும் மொழியும் மதமும் பற்றறுக்கப்பட்டு விரோதத்தில் மட்டுமே விருப்புடையவர்களாகிக் காலம் கழிக்கின்றோம்.

இந்தப் பரிதாப நிலை இளம் சமூகத்திடம் அதீதமாக காணப்படுகின்றது. இந்தக் குறை பாட்டை வேரறுக்க எங்கள் புத்திஜீவிகள் முன் வரவேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் தனக்காக வகுத்துக்கொண்ட எல்லை வேலிகளை உடைத்தெறிந்துவிட்டு சமூகத்தின் எழுச்சியில், விழிப் பூட்டலில் களமிறங்குவது காலத்தின் கட்டாய தேவை.

! தமிழ் இளைஞனே! நீ என்ன செய்கிறாய்?

கடத்தல், கொள்ளை, களவு, பாலியல் விரசம் இதுவா உன்வேலை!

யாருக்காக செய்கிறாய்!

இந்த இனங்கண்ட அழிவு உனக்குத் தெரியாதா?

மதுபோதையில் உன் வாழ்வை நாசமறுக்க நீ எங்கே கற்றுக்கொண்டாய். இப்படிக் கேட்க எங்கள் தமிழ் மண்ணில் யாருளர்?

கீழிறங்கி, இளைஞனே நாமிருக்கிறோம். அஞ்சற்க என்று அவன் தோளில் தட்டினால் திரும்பிப் பார்ப்பான். அந்தப் பார்வையில் பல்கலைக்கழகம் தெரியும். படிப்புத் தெரியும். இப்படியும் வாழலாம் என்ற அற்புதம் தெரியும்.

அவன் மாறுவான். சமூகம் மாறும். அதைச் செய்ய புத்திஜீவிகள் முன்வரவேண்டும். அட என்ர பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்கவைக்க நேரம் போதாமல் இருக்கும் போதுஇந்த நேரத்தில் வீதியில் திரிகின்ற இளைஞனின் தோளில் தட்ட கீழிறங்கவா என்று எவரும் கேட்டுவிடாதீர்கள். அப்படிக் கேட்டால் இப்போது நடக்கும் சிறுதொகைக்கான கொலைக் கலாசாரம் பாதைமாறி எங்களையும் பலியயடுக்கும். கவனம். சமூக முன்னேற்றம் நாம் வாழ்வதற்கு அவசியம்.

வலம்புரி

0 Responses to எங்கள் புத்திஜீவிகள் முன்வர வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com