"சென்னை சூளைமேடு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இந்திய நீதிமன்றத்திலோ அல்லது இலங்கை நீதிமன்றத்திலோ என்னை எவருமே ஆஜர்படுத்தமுடியாது'' இப்படி ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் தனக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது என்றும் அவர் சொன்னார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-
1986இல் இடம்பெற்ற சூளைமேடு துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் 2.11 பிரிவின் கீழ் எனக்கு இலங்கை ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு மே மாதம் நான் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டபோது இது தொடர்பான ஆவணத்தில் கைச்சாத்திட்டேன். முன்னாள் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் விடயத்தில் இலங்கைக்கு இந்திய அரசு உதவும் என்று இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1989 முதல் 1990 வரையான காலப்பகுதிகளில் சூளைமேடு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ வழக்கு சென்னை நீதிமன்றில் இருந்தபோது மேற்படி வாசகத்தை எனது சட்டத்தரணி எனக்கு வாசித்துக் காட்டினார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து எனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என அவர் மேலும் கூறினார்.
அதன் பின்னர் சூளைமேட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சென்னையிலோ அல்லது வேறெந்த இடத்திலுமோ எவரும் பிரச்சினை கிளப்பவில்லை. பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதன் பின்னர் நான் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காகப் பல தடவைகள் இந்தியா சென்று வந்துள்ளேன்.
குறுகிய அரசியல் கரணங்களுக்காகவே இந்த விடயம் இப்போது மீண்டும் சென்னை நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது செல்லுபடியற்ற ஒரு வழக்கு. இது தொடர்பில் என்னை சென்னை நீதிமன்றத்திலோ அல்லது இலங்கை நீதிமன்றத்திலோ ஆஜர்படுத்த முடியாது.'' என்றார்



0 Responses to தன்னை எந்த நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்த முடியாதாம்: டக்ளஸ்