இரத்தம் கசிகிறது.
எங்கள் நம்பிக்கைகள்
வேரூன்றிய நிலங்கள் மீது
படர்கிறது பேரினவாதக் கொடி.
புன்சிரிப்புக்களோடு
அருவிகளில் கும்மாளமடித்த
எங்கள் சிறுவர்களுக்கு
முட்கம்பிகளுக்குள்ளான வாழ்க்கையை
பரிசளித்து விட்டு
எங்களது தாய்நிலத்து காணிகளில்
விருட்சமிட்ட
அரசமரங்களின் அடியில்
அவசரமாய் குடியமர்கிறார்
புத்த பெருமானார்.
போர் விழுங்கிய கடவுள்களின்
திருவுருவங்களிலிருந்து தப்பிய
யேசுவின் முள்முடி தரித்த தலையும்
பிள்ளையாரின் தும்பிக்கையும்
வானம் வெறித்தபடி வெளிறிக்கிடக்கிறது.
வண்ணம் தீட்டிய புத்தபெருமானின்
வாசஸ்தலத்திலிருந்து
சற்றுத் தொலைவேயுள்ள
வயல்வெளி நடுவினில்.
மிதிவெடியில் காலையிழந்த
நொண்டிப் பசுமாட்டின்
காய்ந்துபோன விழியோரக் கண்ணீரில்
குடல் சிதறியிறந்த அதன் கன்றின்
கடைசிநேரப் பார்வை மிதக்கறது.
செத்துப்போன நல்லபாம்புகளை
தோண்டியெடுத்துண்ணும்
வக்கிர சிந்தனைகளோடு
வீதிவழி உறுமிக்கொண்டு போகின்றன
பச்சைக் கழுகுகள்.
ஒற்றைக்கால் இழந்த சிறுமியொருத்திதலையிழந்த தென்னைமரத்தின்
அடியிலிருந்து
தானிழந்த உறவுகளின் பெயர்களை
ஒவ்வொன்றாக
மணலில் எழுதிக் கொண்டிருக்கிறாள்.
எலும்புகள் நிறைந்து கிடக்கும்
வீதியோர சாம்பல் மேடுகளுக்குள்
படுத்துக்கிடந்து ஊளையிடுகின்றன.
எஜமானர்களை தவறவிட்ட
வளர்ப்பு நாய்கள்.
எந்த உணர்ச்சிகளுமற்று
வாடிய வெற்று முகத்துடன்
நிவாரண வரிசையில் நின்றபடி
சுயமாக பேசிக்கொண்டே இருக்கிறாள்.
சுனாமியிடம் பிள்ளைகளையும்...
ஆமியிடம் கணவரையும்...
பறிகொடுத்து விட்ட
அந்த அழகான இளம்சகோதரி.
தாழிடப்படாத தரப்பாள் வீடுகளுக்குள்
எந்த வேளையிலும்
சப்பாத்து போட்டுக்கொண்டு
மிருகங்கள் உள்நுளைய கூடுமென்ற
பயந்த விழிகளோடு பதுங்கியிருக்கிறார்கள்
நட்சத்திரங்களை தொலைத்த நிலவுகள்.
காகங்கள் இப்போதும்
கத்திக்கொண்டே இருக்கின்றன.
”யாரோ வரப்போகினம்”
எனச் சொல்லும் ஆச்சியையும்
காணவில்லை.
யாரும் வருவதாயும் தெரியவேயில்லை.
பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்
எல்லோரும்.
முற்றும் --
படைப்பு - தீபிகா.



0 Responses to காட்சிகளின் சாட்சியாகும் ஒரு சத்தியக் கவிதை