வன்னிப் பிரதேசத்தில் வவுனியா, முல்லைத்தீவின் அபிவிருத்தி தொடர்பான முக்கிய உயர்மட்டக் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதன்முறையாகக் கலந்து கொண்டார்கள்.இந்தக் கூட்டங்கள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெற்றன. அந்தந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய றிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் ஹுஷைன் பாரூக் போன்றோருடன்,
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்காலநாதன், என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் இடம்பெயர்வின்போது முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களில் கைவிட்டு வந்துள்ள தமது விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்களுக்கான உபகரணங்கள், வாகனங்கள், சொத்துக்கள், உடைமைகள் என்பவற்றை மீளப்பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற தமது கோரிக்கை தொடர்பாக இக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணிப் பதிவுகள் இல்லாதவர்களுக்கு காணிக் கச்சேரி நடத்தி அதற்குரிய ஆவணங்களை வழங்கவும் விவசாயம், மீன்பிடி ஆகிய தொழில்களுக்குச் செல்லமுடியாதவாறு தடுக்கப்பட்ட பிரதேசங்களுக்குப் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீள்குடியேற்றங்கள் நடைபெற்றுள்ள பல இடங்களில் நிலவுகின்ற குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கிணறுகளைச் சுத்தம் செய்து கொடுப்பதற்கும் இந்தப் பிரதேசங்களில் நிலவுகின்ற சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இத்தகைய கூட்டங்களிலும் அமைச்சர்கள் பங்குபற்றும் கூட்டங்களிலும் தாங்கள் கலந்து கொண்டு தமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



0 Responses to வன்னி பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் பங்கேற்பு