தமிழர்களின் பாரம்பரிய பூமியான வடக்கில் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் சிங்களத்தையும், புத்த விகாரைகளையும் உருவாக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்க இராணுவம் மேற்கொண்டு வருகிறது.இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து நடத்தப்படும் ஏசியா நியூஸ் இணையத்தளத்தில் தமிழர்களின் அடையாளங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டு வருகிறது என்பது விரிவாக கூறப்பட்டுள்ளது.
"ஓராண்டிற்கு முன்னர் வரை இராணுவத் தாக்குதலிற்கு உட்படுத்தப்பட்ட வந்த தமிழர் பூமி, இன்றைக்கு வேறு விதமான தாக்குதலிற்கு உட்படுத்தப்படுகிறது. தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது இப்போது தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழர்களின் ஊர்கள் அனைத்தும் சிங்கள மயமாக்கப்படுகின்றன" என்று வன்னி, கிளிநொச்சி மாவட்டங்களில் பயணம் செய்துவிட்டுத் திரும்பியுள்ள மனித உரிமைப் போராளியும், சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளையின் இயக்குனருமான ருக்சான் ஃபெர்ணான்டோ தங்களிடம் தெரிவித்ததாக ஆசியா நியூஸ் செய்தி கூறுகிறது.
சாலைகளின் பெயர்கள் தமிழில் இருந்ததெல்லாம் இப்போது சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு எழுதப்படுகின்றன. இதுவரை தமிழில் இருந்த பெயர் பலகைகளெல்லாம் மறைந்துவிட்டன. சிங்களத்தில் மேலேயும், தமிழில் கீழேயும் பெயர்கள் எழுதப்படுகின்றன.
இதில் முக்கியமான கவனிக்க வேண்டியது என்னவெனில், தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுகின்றன. இதன் மூலம் இந்த ஊர்கள் எல்லாம் சி்ங்கள நிலங்களே என்று திரிக்கும் முயற்சி நடக்கிறது என்று அங்குள்ள அர்ச்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்று ஆசியா நியூஸ் கூறுகிறது.
வன்னியிலும், கிளிநொச்சியிலும் புத்த விகாரைகள் புதிது புதிதாகக் கட்டப்படுகின்றன, ஆனால், போரினால் சிதைந்த தமிழர்களின் கோயில்களும், தேவாலயங்களும் அப்படியேதான் இருக்கின்றன.
தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படும் அதே நேரத்தில், சிங்கள வெற்றியைக் குறிப்பிடும் அடையாளங்கள் கட்டப்படுகின்றன என்று அச்செய்தி தெரிவிக்கிறது.



0 Responses to வன்னியில் தமிழர் அடையாளங்கள் அழிப்பு