Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாமும் பூமிப்பந்திலுள்ள மற்றைய தேசிய இனங்களைப் போல் சுதந்திரமாக, நிம்மதியாக, கௌரவமாக வாழவேண்டும் என்பதற்காக தம்மையே உருக்கிய எமது தேசப் புதல்வர்களை ஆண்டு தோறும் நாம்; நன்றியோடு நினைவிருத்தும் நாள் வந்து விட்டது. தாம் நேசித்த மக்களுக்காக ஒரு மானிடப் பிறவி தன்னால் செய்யக் கூடிய உயரீகமான உயிரீகம் செய்து எம் நெஞ்சமெல்லாம் நிறைந்து விட்ட புனிதர்கள் எம் தேசப் புதல்வர்கள்.

உயிர் இறைத்தே விடுதலைப் பயிரை வளர்க்க வேண்டுமென்பதே வாழ்வியல் விதி. அதற்காக இடர் நிறைந்த கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் கடலிலும் வானிலும் நம்முயிர்த் தலைவனின் வழியில் நடந்தனர் எம் தேசப் புதல்வர்கள். அவர்கள் களமாடிய மண்ணிலுள்ள துயிலுமில்லங்கள் எல்லாம் பன்னாட்டு சட்ட விதிகளுக்கு முரணாக மனித நாகரீகமே வெட்கித் தலை குனியும் வகையில் துடைத்தழிக்கப் பட்டுள்ளது. தாயகத்திலே நமது மக்கள் தம்மை நேசித்த தாம் நேசித்த எம் தேசப் புதல்வர்களுக்காக அவர்களது துயிலுமில்லங்களில் தீபமேந்தி வணங்கக் கூட இன்று வாய்ப்பில்லை.

இவ்வாறான ஒரு பின்புலத்தில் புலம் பெயர்ந்த மக்களால் மட்டுமே நாம் வாழ்கின்ற தேசங்களில் தேசிய நினைவெழுச்சி நாளை கனதியாக காத்திரமாக செய்ய முடியும். செய்ய வேண்டும். அந்த உணர்வெழுச்சியோடு நாம் பல்லாயிரக் கணக்கில் தேசிய நினைவெழுச்சி நாள் மண்டபங்களை நிறைக்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலின் பின்னர் தாயக பூமியிலே எமது விடுதலைப் பயணத்தை முடக்கி விட்டோமென்ற இறுமாப்போடு சிங்களப் பேரினவாதம் உள்ளது. தமிழீழக் கனவை காத்திரமாக காவிச் செல்லக் கூடியவர்கள் புலம் பெயர் தமிழர்களே என்ற வகையில் அதனை முறியடிப்பதற்காக அது பெருமுயற்சி செய்கிறது. நம்மவர்களைக் கொண்டே நம்மைப் பலவீனப் படுத்தவும் பிளவு படுத்தவும் முயற்சிக்;கிறது. இந்தச் சதி வலையில் சிக்கி நம்மை நாமே அழித்து விடக் கூடாது. இது நாங்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டிய காலம். நம் புலன்கள் யாவும் மிக மிக விழிப்பாக இருக்க வேண்டிய காலம். எதிரி நம்மிடையேயும் பல வடிவங்களில் இருப்பான். அவர்களை நாம் இனங்கண்டு கொள்வோம். நமது எண்ணங்களும் செயற்பாடுகளும் நம் தேசப் புதல்வர்களைப் போல் தூய்மையாக இருக்க வேண்டும். விடுதலை வேண்டும் ஓரினம் முதலில் தன் மனதளவில் தான் விடுதலை அடைய வேண்டும். தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் தேசங்களிலும் பொய்மைகளும் புரளிகளும் தலை விரித்தாடுகிறது. பொய்மைகள் நீண்ட காலம் வாழ்வதில்லை. சத்தியம் வெல்லும்.

பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களே!

பிரித்தானியாவிலே மிகப் பெரியதான எம் மக்கள் பாரிய அளவிலே உணர்வெழுச்சியோடு பங்கெடுக்கின்ற எக்செல் மண்டபத்திலே தான் இவ்வாண்டும் தேசிய நினைவெழுச்சி நாள் நடாத்தப் படுகின்றது. தாயகத்திலே துடைத்தழிக்கப்பட்ட துயிலுமில்லங்களின் மாதிரிகளை நாம் அமைத்து அதன் முன்பாக நாம் கூட வேண்டும். நாம் பல்லாயிரக் கணக்கிலே நம் கைகளிலே தீபமேந்தி எமக்காக தம்மை உருக்கிய எமது தேசப் புதல்வர்கள் ஒவ்வொருவரின் முகங்களையும் அந்த தீபங்களில் காண வேண்டும். அமைதியாக ஒழுங்காக அவர்களுக்கு மலர் வணக்கம் செய்ய வேண்டும். எந்த விடுதலைக்காக தம் இன்னுயிர்களை கொடையாக தந்தார்களோ அந்த விடுதலைக்காக நாம் எந்தவிதமான தொய்வுமின்றி தொடர்ச்சியாக உழைப்போமென்று நாம் உறுதி எடுக்க வேண்டும்.

நினைவெழுச்சி நாள் மண்டபத்திலே நாம் உணர்வெழுச்சியோடு பங்கெடுக்கின்ற வகையிலே ஏற்பாடுகள் யாவும் +ர்த்தி செய்யப் பட்டுள்ளன. மண்டபத்திலே நடக்க விருக்கும் அத்தனை விடயங்களும் மண்டப நிர்வாகிகளோடு சரி பார்க்கப்பட்டு விட்டன. அன்றைய தினம் முன் அனுமதி பெறாத இறுவட்டுக்கள் துண்டு பிரசுரங்கள் போன்ற எந்த விடயங்களையும் மண்டபத்திலே முன்னெடுக்க வேண்டாமென நாம் தாழ்மையோடு வேண்டிக் கொள்கின்றோம்.

பிரி;த்தானியாவின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நாம் உணர்வெழுச்சியோடு கூடி நம் தேசப் புதல்வர்களை வணங்கி விடுதலைப் பயணத்தை தொடர்வோமென நம் சூரியன் உதித்த இன்றைய நாளிலே நாம் திடசங்கர்ப்பம் கொள்வோம்.

தேசிய நினைவெழுச்சி நாள் தொடர்பான மேலதிக விபரங்களையும், போக்குவரத்து ஒழுங்குகளையும் கீழுள்ள இணைப்பினூடாக எமது இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் - பிரித்தானியா

http://www.tnrf.co.uk/

0 Responses to தேசிய நினைவெழுச்சி நாள் 2010 பிரித்தானியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com