2006ம் வருடம் நவம்பர் மாதம் 10ம்திகதி அவர் கொழும்பில் வைத்துப் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் கடத்தப்படுதல் மற்றும் காணாமற் போதல் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போது அதற்கெதிராகக் குரல் கொடுப்பதில் ரவிராஜ் முன்னின்று செயற்பட்டார். அது மாத்திரமன்றி யாழ். மாவட்டத்தின் அரச நிர்வாக மட்டத்தில் நடந்த ஊழல், மோசடிகளை வெளிக்கொணருவதிலும் அவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.
தமிழ் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களைத் தணிக்கும் நோக்கில் மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய ஆகியோருடன் இணைந்து மக்கள் கண்காணிப்புக் குழு என்றொரு அமைப்பை உருவாக்குவதில் ரவிராஜ் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
மக்கள் கண்காணிப்புக்குழு 2006ம் ஆண்டு செப்டம்பர் 19ம் திகதி உருவாக்கப்பட்டு ஐம்பது நாட்கள் கடந்த நிலையில் ரவிராஜின் படுகொலைச் சம்பவம் அரங்கேறியது.
மக்கள் கண்காணிப்புக்குழுவின் பலமான பிரச்சார வியூகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் அன்றைய ஜனாதிபதி ஊடக அமைப்பின் முக்கியஸ்தர்களான லால் வெடிக்கார, அஷ்ரப் அலீ ஆகியோரை இணைச்செயலாளர்களாகக் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தது. ஆயினும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஆதாரபூர்வமான தகவல்களின் முன்னால் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருந்தது.
அதன் பின் ஜனாதிபதி நியமித்த குழுவுக்கு இணைத்தலைவர்களாக அமைச்சர்களான டளஸ் அலஹப்பெரும, ராஜித சேனாரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதற்கு மேலதிகமாக முன்னாள் பிரதியமைச்சர்களான கே.ஏ. பாயிஸ், பெ. இராதாகிருஷ்ணன் மற்றும் அன்றைய கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் அக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆயினும் அக்குழு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்குப் பதில் குற்றவாளிகளைத் தப்புவிக்கும் நோக்கில் செயற்பட்டதன் காரணமாக அக்குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் இணைச்செயலாளர்கள் அதனை விட்டு ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டனர்.
அத்துடன் ரவிராஜின் படுகொலைக்குப் பின்பும் மக்கள் கண்காணிப்புக்குழு கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தது. அதன் காரணமாக அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான மனோ கணேசனுக்கு சர்வதேச விருதொன்றும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை நான்கு வருடங்கள்