Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியாமனிக்பாம்' முகாம் வலயம் 4 இல் இருந்து 219 குடும்பங்களைச் சேர்ந்த 514 பேர் நேற்று கதிர்காமர் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் இந்த இடமாற்றம் தமது விருப்பத்திற்கு மாறாகவே நடைபெற்றிருப்பதாக மக்கள் மனம் நொந்து தெரிவித்துள்ளனர்.

அப்பிரதேச கிராம சேவையாளரின் ஏற்பாட்டில் வலுக்கட்டாயமாகப் படையினரால் அவர்கள் பஸ்கள் மூலம் கதிர்காமர் முகாமுக்கு கடந்த சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் நேற்று படையினரின் பிரசன்னம் எதுவும் இன்றி மக்கள் தாமாகவே சென்றனர். மக்களை இடமாற்றும் இந்தப் பணி மூன்று தினங்கள் இடம்பெறும்.

வலயம் 4 முகாமில் 4000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் இவர்களை கதிர்காமர் முகாக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் அண்மைய மாதங்களாகவே அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வசதிகள் குறைந்த முகாமுக்கு கொண்டு செல்லும் முயற்சியை ஆரம்பத்தில் நாங்கள் எதிர்த்தோம். ஆனால் கையாலாகாத நிலையில் தற்போது வசதிகுறைந்த இடத்துக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று முகாம் வாசிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னியில்தான் யுத்தத்தின்போது இடத்திற்கு இடம் இடம் மாறிச் சென்று கஷ்டங்களை அனுபவித்தோம். இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்த பின்பும் முள்ளுக்கம்பியினால் அடைக்கப்பட்ட முகாம்களில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றப்பட்டு பல வசதியீனங்களுக்கு மத்தியில் இந்த வலயம் 4 முகாமுக்கு வந்து சேர்ந்தோம். ஆரம்பத்தில் இங்கும் வசதிகள் பற்றாக்குறை இருந்தன. இப்போது ஓரளவு அடிப்படை வசதிகளுடன் இந்தச் சூழலில் வாழப் பழகிவிட்டோம். இருந்தாலும் எங்களுடைய சொந்த இடத்திற்குச் சென்று மீள்குடியேறி அமைதியாக வாழ வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.

ஆனால் மீள்குடியேற்றத்திற்குச் செல்ல வேண்டியதருணத்தில் இங்கிருந்து கதிர்காமர் முகாமுக்குச் செல்லுமாறு அதிகாரிகளும் அமைச்சர் முரளிதரனும் எங்களை வற்புறுத்தினார்கள்.

எம்மை எமது சொந்த இடங்களில் எங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுங்கள் என்று எங்களிடம் வந்து இடம்மாறிச் செல்லுமாறு கூறிய இராணுவ அதிகாரிகள் வவுனியா மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் பிரதி அமைச்சர் முரளிதரன் உட்பட அனைவரிடமும் நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் எங்களுடைய வேண்டுகோள்கள் எதுவுமே அவர்களது செவிகளில் ஏறவில்லை.

மழை தூறிக் கொண்டிருந்த வேளையில் உடைமைகள் சாமான்களை ஏற்றுமாறு சொல்லி லொறிகளைக் கொண்டு வந்து நிறுத்திக்கொண்டு வாகனங்களில் வந்து ஏறுமாறு இராணுவத்தினர் வற்புறுத்தினார்கள்.

கௌரிகாப்பும் தீபாவளி பண்டிகையும் கந்தசஷ்டி விரதமும் முடிந்தபின்னர் வேண்டுமானால் நாங்கள் இடம்மாறிச் செல்கிறோம் என இராணுவ அதிகாரிகளிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டிருந்தோம். ஆனால் அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை.

எங்களுடைய விருப்பத்திற்கு மாறாக 300பேரை முதல் நாள் வலயம் 4 முகாமிலிருந்து கதிர்காமர் முகாக்கு இராணுவத்தினர் ஏற்றிச் சென்று இறக்கிவிட்டார்கள்.

கதிர்காமர் முகாமில் துர்நாற்றம் வீசிய அந்த வீடுகளைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கு பக்கத்தில் தண்ணீர் வசதியும் இல்லை. தூரத்தில் இருந்தே தண்ணீர் எடுத்து வர வேண்டியிருந்தது. இத்தகைய அவல நிலை எங்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும்? யுத்தச் சூழ்நிலையில் சிக்கியிருந்ததற்கான தண்டனையா அல்லது யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழ்ந்தது குற்றமா?

போர்ச்சூழலில் பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து உயிர்கள் உடைமைகள் சொத்துக்கள் என்பவற்றை இழந்து எதிர்காலம் பற்றிய நம்பிக்கையில்லாமல் நடைப்பிணங்களாக இராணுவத்தினரிடம் சரணடைந்த எங்களை யுத்தம் டிவடைந்து ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையில் இப்படி நடத்துவதுதான் ஓர் அரசாங்கத்தின் மனிதாபிமானமா?

அடிப்படை வசதிகளுடன் இருந்த எங்களை கதிர்காமர் முகாமில் சுத்தம் செய்யப்படாத வீடுகளில் சென்று இருக்குமாறு வாகனங்களில் ஏற்றிச் சென்று விட்டுள்ளார்கள். இங்கு தண்ணீர் வசதியில்லை. விறகுக்கும் வசதியில்லை. மலசலகூடங்களும் பழுதடைந்திருக்கின்றன. இவ்வாறு அடிப்படை வசதிகளற்ற நிலையில் எங்களால் எப்படி இடம் மாறியிருக்க முடியும் என தெரியவில்லை.

அரசியல் நோக்கத்திற்காகவா அல்லது இராணுவ நோக்கத்திற்காகவா இந்த இடம் மாற்றும் நடவடிக்கை இடம்பெறுகின்றது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

எங்களுடைய இந்தப் பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற பிரதிநிதிகளிடம் பல தடவைகள் தொலைபேசி மூலமாகத் தெரிவித்திருந்தோம். ஆனால் அவர்கள் எங்களுடைய கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சித்ததாக தெரியவில்லை.

மொத்தத்தில் நாங்கள் அனைவராலும் கைவிடப்பட்டவர்களாக இந்த நாட்டின் மோசமான அனாதைகளாக்கப்பட்டுள்ளோம் என்பதுதான் யதார்த்தமாக இருக்கின்றது.

இவ்வாறு வலயம் 4 முகாமிலிருந்து முதல் தொகுதியாகக் கதிர்காமர் முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to படையினர் எங்களை அச்சுறுத்தியே முகாம் மாற்றினார்கள்: முகாம் மக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com